சலூன் கடை உரிமையாளர் உள்பட 2 பேர் கைது

சலூன் கடை உரிமையாளர் உள்பட 2 பேர் கைது
கோவை
கோவை தொண்டாமுத்தூரை சேர்ந்தவர் சஞ்சய் தாஸ் (வயது 32). இவர் ஆர்.எஸ்.புரத்தில் சலூன் கடை வைத்து நடத்தி வருகிறார். இவருடை சொந்த ஊர் பீகார் மாநிலம் ஆகும். சலூன் கடையில் பீகாரை சேர்ந்த வித்யானந்தன் (22) என்பவர் ஊழியராக பணியாற்றினார். இந்தநிலையில் கடந்த 13-ந் தேதி ஆர்.எஸ்.புரத்தை சேர்ந்த 17 வயது சிறுவன் சலூன் கடைக்கு வந்தான். அப்போது அவன் அங்கு இருந்த வித்யானந்தனிடம் முகத்தை பிளீச்சிங் செய்ய சொன்னான்.
இதையடுத்து சிறுவனின் முகத்தை வித்யானந்தன் பிளீச்சிங் செய்து கொண்டு இருந்தபோது கருவியில் வெந்நீர் மூலம் நீராவியை முகத்தில் தெளித்தார். அப்போது சிறுவனின் முகத்தில் காயம் ஏற்பட்டது. இதனால் அவன் அலறி துடித்தான். இதையடுத்து அக்கம்பக்கத்தில் இருந்தவர்களின் உதவியுடன் சிறுவன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான்.
இதுகுறித்த புகாரின் பேரில் ஆர்.எஸ்.புரம் போலீசார் வித்யானந்தன் மற்றும் சலூன் கடை உரிமையாளர் சஞ்சய் தாஸ் ஆகியோர் மீது கவனக்குறைவாக பணியாற்றி காயத்தை ஏற்படுத்துதல் என்ற பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
----------------






