மழை நீர் வெளியேறாததால் வீடு இடிந்து விழுந்தது. 2 மகன்களுடன் பெண் உயிர்த்தப்பினார்
house
திருமுருகன்பூண்டி பகுதியில் மழை நீர் வெளியேறாததால் வீடு இடிந்து விழுந்தது. இதில் அதிஷ்டவசமாக பெண் தனது 2 மகன்களுடன் உயிர்த்தப்பினார்.
மழை
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததை தொடர்ந்து திருப்பூர் மற்றும் சுற்று வட்டாரத்தில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் ஒருசில இடங்களில் குடியிருப்புகளில் மழைநீர் புகுந்ததுடன், சாலைகள் முழுவதும் சேறும், சகதியுமாக காணப்படுகிறது. இந்த நிலையில் மாநகராட்சி 25-வது வார்டு மூகாம்பிகை காலனி பகுதியில் போதிய அளவில் வடிகால் வசதி இல்லாததால் சாலையில் முழங்கால் அளவு மழைநீர் தேங்கி குளம் போல் காட்சியளிக்கிறது.
அந்த வழியாக இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் தண்ணீரில் நீந்தியபடியும், நடந்து செல்பவர்கள் அந்த வழியாக செல்ல முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த சாலையில் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் உள்பட பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். அந்த பகுதியில் முறையாக வடிகால் அமைத்து, மழைநீர் தேங்கும் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வீடு இடிந்தது
இதேபோல் திருமுருகன்பூண்டியை அடுத்த அம்மாபாளையம் அம்பேத்கர் நகர் சமுதாயக்கூடம் அருகே உள்ள சரஸ் (வயது 44) வீட்டின் ஒருபகுதி நேற்று அதிகாலை இடிந்து விழுந்தது. அந்த வீட்டில் சரசும், அவருடைய மகன்கள் மனோஜ், தனசேகர் ஆகியோர் உள்புறமாக தூங்கிக் கொண்டிருந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதுகுறித்து தகவலறிந்த திருமுருகன்பூண்டி நகராட்சி அதிகாரிகள் மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று வீடு இடிந்து விழுந்ததால் ஏற்பட்ட சேதம் தொடர்பாக விசாரணை நடத்தினார்கள்.