பிளஸ்-2 மாணவி தற்கொலை முயற்சி
பொள்ளாச்சியில் ஆசிரியை திட்டியதால் மன உளைச்சலுக்கு ஆளாகி பிளஸ்-2 மாணவி தற்கொலை முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொள்ளாச்சி
பொள்ளாச்சியில் ஆசிரியை திட்டியதால் மன உளைச்சலுக்கு ஆளாகி பிளஸ்-2 மாணவி தற்கொலை முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிளஸ்-2 மாணவி
கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி, அங்குள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார்.
இந்த நிலையில் அந்த சிறுமி நேற்று முன்தினம் மாலையில் பள்ளி முடிந்ததும் வீட்டுக்கு வந்தார். பெற்றோர் வெளியே சென்றிருந்ததால், வீட்டில் யாரும் இல்லை.
மயங்கி கிடந்தார்
இதற்கிடையில் சிறிது நேரம் கழித்து அவருக்கு உணவு கொடுக்க உறவினர் ஒருவர் வீட்டுக்கு வந்தார். ஆனால் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்ததோடு, நீண்ட நேரம் தட்டியும் திறக்கப்படவில்லை.
பின்னர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்றபோது, விஷம் குடித்து அந்த சிறுமி மயங்கி கிடந்தார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் உடனடியாக அவரை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
மன உளைச்சல்
அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின், மேல்சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த பொள்ளாச்சி மேற்கு போலீசார் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
முதற்கட்ட விசாரணையில், பள்ளியில் ஆசிரியை திட்டியதாலும், சக மாணவிகள் கிண்டல் செய்ததாலும் அவர் மன உளைச்சலுக்கு ஆளாகி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.