மின்சாரம் தாக்கி 3 பேர் பலி


மின்சாரம் தாக்கி 3 பேர் பலி
x
தினத்தந்தி 15 Nov 2022 7:49 PM GMT (Updated: 2022-11-16T02:27:51+05:30)

வெவ்வேறு சம்பவங்களில் மின்சாரம் தாக்கி 3 பேர் பலியாகினர்.

விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூர்,

வெவ்வேறு சம்பவங்களில் மின்சாரம் தாக்கி 3 பேர் பலியாகினர்.

தொழிலாளி

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள சுந்தரபாண்டியம் பகுதியை சேர்ந்தவர் மோகன முருகன் (வயது 42). இவர் சின்னமனூர் பகுதியில் உள்ள ஜவுளிக்கடை ஒன்றில் பணிபுரிந்து வந்தார். இவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளை பார்ப்பதற்காக சுந்தரபாண்டியத்துக்கு வந்துள்ளார்.

அப்போது வீட்டில் குளிப்பதற்காக வெந்நீர் போட வாட்டர் ஹீட்டரை போட்டார். பின்னர் வெந்நீரை எடுக்க சென்றபோது எதிர்பாராதவிதமாக மின்சாரம் அவரை தாக்கியது. உடனே அவரை மீட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதுகுறித்து கிருஷ்ணன்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள தொட்டியபட்டி பகுதியை சேர்ந்தவர் நயனம்மாள் (51). இவர் ஒரு பட்டாசு ஆலையில் பணியாற்றி வந்தார். இந்தநிலையில் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்ததில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இதுகுறித்து மல்லி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மற்றொரு சம்பவம்

சிவகாசி தாலுகாவில் உள்ள ரெங்கபாளையம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் ராமலிங்கம் (35). கூலி தொழிலாளியான இவர் தூங்க செல்வதற்கு முன்னர் வீட்டின் மெயின் கேட்டை மூடுவதற்காக வந்துள்ளார். அப்போது கேட்டை இழுத்து மூட முயன்ற போது திடீரென மின்சாரம் பாய்ந்து அங்கேயே சுருண்டு விழுந்துள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அவரை மீட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அப்போது அங்கு பணியில் இருந்த டாக்டர், ராமலிங்கத்தை சோதனை செய்த போது அவர் ஏற்கனவே இறந்துவிட்டது தெரியவந்துள்ளது. இதுகுறித்து எம்.புதுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் வீட்டிற்கு செல்லும் மின்சார வயர் அறுந்து கேட்டின் மீது விழுந்து இருந்துள்ளது. இதை கவனிக்காத ராமலிங்கம் கேட்டை திறக்க முயன்றபோது மின்சாரம் தாக்கி இறந்தது தெரியவந்தது.


Next Story