6 வீடுகளின் குடிநீர் இணைப்புகள் துண்டிப்பு


6 வீடுகளின் குடிநீர் இணைப்புகள் துண்டிப்பு
x

waterut

திருப்பூர்

காங்கயத்தில் 3 வருடங்களாக குடிநீர்க்கட்டணம் செலுத்தாததால் 6 வீடுகளின் குடிநீர் இணைப்புகளை நகராட்சி ஊழியர்கள் நேற்று துண்டிப்பு செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

இதுகுறித்து காங்கயம் நகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-

6 குடிநீர் இணைப்புகள் துண்டிப்பு

காங்கயம் நகராட்சியில் 2020-ம் நிதியாண்டு முதல் தற்போது வரை 3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள குடிநீர்க் கட்டணங்களை செலுத்தும்படி காங்கயம் நகராட்சி சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த நிலையில் கொடுத்த கால அவகாசத்தை தாண்டியும் இன்னும் நிலுவை தொகைகள் செலுத்தப்படாமல் இருந்தது.

இதையடுத்து காங்கயம் நகரில் 6 குடியிருப்புகளின் குடிநீர் இணைப்புகளை காங்கயம் நகராட்சி ஊழியர்கள் நேற்று துண்டிப்பு செய்து நடவடிக்கை மேற்கொண்டனர். இந்த 6 வீடுகளின் மொத்த குடிநீர் கட்டண நிலுவைத்தொகை ரூ.28 ஆயிரத்து 500 ஆகும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

ஜப்தி நடவடிக்கைகள்

இதுகுறித்து காங்கயம் நகராட்சி ஆணையாளர் எஸ்.வெங்கடேஷ்வரன் கூறியதாவது:- காங்கயம் நகராட்சிப் பகுதி பொதுமக்கள் நிலுவையில் உள்ள குடிநீர்க் கட்டணங்களை உடனடியாக நகராட்சி அலுவலகத்தில் செலுத்தி குடிநீர்க்குழாய் துண்டிப்பு மற்றும் ஜப்தி நடவடிக்கைகளை தவிர்த்துக் கொள்ளவும். குடிநீர்க் கட்டணம் செலுத்தத்தவறும் பட்சத்தில் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும் என்றார்.

குடிநீர்க் கட்டணம் செலுத்தாததால் நேற்று முன்தினம் காங்கயம் நகரில் 5 வீடுகளின் குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Related Tags :
Next Story