கஜா புயல் நினைவு தினம் இன்று...


கஜா புயல் நினைவு தினம் இன்று...
x

Today is Gaja Storm Remembrance Day...

புதுக்கோட்டை

புயலில் சாய்ந்த மரங்கள்

கடந்த 2018-ம் ஆண்டு நவம்பர் 15-ந்் தேதி இரவு கஜா புயல் கரையை கடக்கும் என்று வானிலை மையம் எச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிட்டு கொண்டிருந்தது. இரவு 10 மணிக்கு மேல் மழையும், காற்றும் வீசத் தொடங்கியது. நள்ளிரவை கடந்து 16-ந் தேதி அதிகாலை புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் புயல் காற்று வீசத்தொடங்கியது. இதையடுத்து கடற்கரையோரம் நிறுத்தப்பட்டிருந்த படகுகள் சேதமடைந்து தென்னை, மா, பலா, வாழை, தேக்கு உள்ளிட்ட மரங்களையும் வேரோடு சாய்த்தது. 100 ஆண்டுகளை கடந்து நின்ற ஆலமரம், அரசமரம், புளிய மரங்களை சாய்த்தது.

மரங்களை அகற்றும் பணி

மரங்கள் சாய்ந்து மின்கம்பங்கள் மீது விழுந்ததில் மின்கம்பங்கள் முறிந்து விழுந்தது. இதனால் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டது. கூரைகளை காற்று தூக்கி வீசியது. பொழுது விடியும்போது ஒவ்வொரு கிராமத்திலும் பல வீடுகளின் மேற்கூரைகள் காணாமல் போயிருந்தது. ஏராளமான வீடுகளில் மரங்கள் சாய்ந்து இருந்தது. உள்ளூர் இளைஞர்கள் அவசர அவசரமாக மீட்புப் பணிகளில் இறங்கி வீடுகளில் சாய்ந்த மரங்களை அப்புறப்படுத்தி வீட்டுக்குள் சிக்கி இருந்தவர்களை மீட்டனர். தொடர்ந்து கிராமங்களில் இருந்து வெளியே செல்ல முடியாத அளவிற்கு சாலைகளில் விழுந்து கிடந்த மரங்களை அகற்றும் பணியை உள்ளூர் இளைஞர்களே மேற்கொண்டனர்.

பொதுமக்கள் சாலை மறியல்

அடுத்தடுத்து ஒரு வாரத்திற்கு இந்த பணிகளை இளைஞர்கள் மேற்கொண்டனர். குடிக்க தண்ணீர் இல்லை. மின்சாரம் இல்லை. இதனால் பல இடங்களிலும் மக்கள் தண்ணீர், உணவு கேட்டு சாலை மறியல்களில் ஈடுபட்டனர். தன்னார்வலர்கள் நிவாரண பொருட்கள் கொண்டு வந்து கொடுத்தனர். மின்சார தேவைகளை பூர்த்தி செய்ய மின்வாரிய அலுவலர்களுடன் உள்ளூர் இளைஞர்கள் இணைந்து மின் கம்பங்களை நட்டு மின் இணைப்புகளையும் கொடுத்தனர்.

இப்படி ஒவ்வொரு பணியும் செய்து முடிக்க சுமார் ஆறு மாதங்கள் கடந்தது. விவசாயிகள் தங்கள் தோட்டங்களில் கிடந்த மரங்களை வெட்டி அகற்ற முடியாமல் தவித்துக் கொண்டிருந்தனர். அரசு உதவியுடன் அந்த மரங்கள் அகற்றப்பட்டது. ஆனாலும் அரசு கொடுத்த நிவாரணம் போதுமானதாக இல்லை என்றனர்.

இன்னும் மாறவில்லை

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் சுற்றுவட்டார கிராமங்களில் கஜா புயலில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மீண்டும் விவசாயம் செய்ய தொடங்கிய நிலையில் அவர்கள் பழைய வருமானத்தை ஈட்ட முடியவில்லை. பிரபலமான மொய் விருந்துகளும் இன்று வரை முடங்கியுள்ளது. ஆயிரக்கணக்கில் சாய்ந்த மரங்களை மீட்கும் முயற்சியாக விவசாயிகள் தங்கள் தோட்டங்களிலும், தன்னார்வலர்கள், சாலைப் பணியாளர்கள் சாலைகள், பொதுவெளியில் நட்ட மரங்கள் தற்போது வளரத் தொடங்கியுள்ளது.

புயலில் சேதமடைந்த குடிசைகளின் மேல் போடப்பட்ட தார்ப்பாய்கள் கிழிந்துவிட்டது. இன்னும் குடிசைகளை மாற்ற முடியாத நிலையில் உள்ளனர். பொதுமக்கள் இன்னும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பவில்லை. மேற்பனைக்காடு உள்பட பல இடங்களில் நிழற்குடைகள், வழிகாட்டி பெயர்ப்பலகைகள் உடைந்துள்ளது. ஆனால் அவைகள் இன்னும் சீரமைக்கப்படாமல் ஆபத்தான நிலையிலேயே உள்ளது.


Next Story