தஞ்சை சூப்பர் மார்க்கெட்டில் ரூ.40 லட்சம் மோசடி
தஞ்சை சூப்பர் மார்க்கெட்டில் ரூ.40 லட்சம் மோசடி செய்த முன்னாள் நிர்வாக இயக்குனர் அமிர்தா பாண்டியனை போலீசார் கைது செய்தனர்.
தஞ்சை சூப்பர் மார்க்கெட்டில் ரூ.40 லட்சம் மோசடி செய்த முன்னாள் நிர்வாக இயக்குனர் அமிர்தா பாண்டியனை போலீசார் கைது செய்தனர்.
மோசடி புகார்
தஞ்சை புதிய வீட்டுவசதி வாரியம் குடியிருப்பு பகுதியில் 1,000 விவசாயிகளை உறுப்பினராக கொண்டு கடந்த 2015-ம் ஆண்டு காவிரி டெல்டா உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் தொடங்கப்பட்டது.
இந்த நிறுவனம் சார்பில், 15 பேரை இயக்குனராக கொண்டு, டெல்டா மார்ட் சூப்பர் மார்க்கெட் தொடங்கப்பட்டது.
இதன் நிர்வாக இயக்குனராக ஒரத்தநாடு அருகே காவாரப்பட்டு கிராமத்தை சேர்ந்த அமிர்தாபாண்டியன் (வயது52) நியமிக்கப்பட்டார்.
இவர் கடந்த 2016-ம் ஆண்டு ஜூன் 1-ந் தேதி முதல் 2017-ம் ஆண்டு ஜனவரி 31-ந் தேதி வரை சூப்பர் மார்க்கெட்டில் வரவு-செலவுகளை கவனித்து வந்தபோது, ரூ.39 லட்சத்து 56 ஆயிரத்து 126-யை கையாடல் செய்து மோசடி செய்ததாக, நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் பன்னீர்செல்வம், கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரி 17-ந் தேதி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் செய்தார். அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
கைது
இதையடுத்து தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியாவிடம் கடந்த சில நாட்களுக்கு முன்பு, டெல்டா மார்ட் இயக்குனர்கள் சார்பில், மீண்டும் மனு அளிக்கப்பட்டது.
இந்த மனு மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். உரிய விசாரணை மேற்கொண்ட அவர், முன்னாள் நிர்வாக இயக்குனரான அமிர்தா பாண்டியனை நேற்றுமுன்தினம் கைது செய்தார்.