ஒரே நாளில் ரூ.50 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்


ஒரே நாளில் ரூ.50 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்
x

50 lakh smuggled gold confiscated in one day

திருச்சி

ரூ.50 லட்சம் மதிப்பிலான...

திருச்சி விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அவ்வாறு வரும் விமானங்களில் சில பயணிகள் தங்கத்தை கடத்தி வருவதும், அதனை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் தொடர் கதையாக இருந்து வருகிறது. கடந்த சில நாட்களாக இதுபோன்ற சம்பவம் குறைந்திருந்தது.

இந்நிலையில் நேற்று முன்தினம் ஒரே நாளில் சுமார் ரூ.50 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அது குறித்த விவரம் வருமாறு:-

தங்கம் பறிமுதல்

நேற்று முன்தினம் இரவு 11.25 மணிக்கு சிங்கப்பூரில் இருந்து ஸ்கூட் விமானம் திருச்சி வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, சிங்கப்பூரை சேர்ந்த நடராஜன்(வயது 53) என்பவர் தனது உடலில் மறைத்து ரூ.16 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான 309 கிராம் தங்கத்தை கடத்தி வந்தது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து அவரிடம் இருந்து தங்கத்தை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள், அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கைது

இதேபோல் நேற்று முன்தினம் இரவு 11.50 மணிக்கு சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது புதுக்கோட்டையை சேர்ந்த பாக்கியராஜ்(38) என்ற பயணி தனது உள்ளாடையில் மறைத்து ரூ.16 லட்சத்து 45 ஆயிரம் மதிப்பிலான 362 கிராம் தங்கத்தை கடத்தி வந்தது தெரியவந்தது. அதனை பறிமுதல் செய்த அதிகாரிகள், பாக்கியராைஜ கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் அதே விமானத்தில் வந்த அரியலூரை சேர்ந்த ரங்கசாமி(36) என்ற பயணி தனது உள்ளாடையில் மறைத்து எடுத்து வந்த ரூ.16 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான 363 கிராம் தங்கத்தையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் ராமசாமியை கைது செய்தனர். இந்த சம்பவம் திருச்சி விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story