பச்சை தேயிலை கிலோவுக்கு ரூ.50 நிர்ணயிக்க வேண்டும்

குறைந்தபட்ச கொள்முதல் விலையாக பச்சை தேயிலை கிலோவுக்கு ரூ.50 நிர்ணயிக்க வேண்டும் என்று மத்திய மந்திரியிடம் விவசாயிகள் கோரிக்ைக மனு அளித்தனர்.
கோத்தகிரி
மலை மாவட்ட சிறு விவசாயிகள் சங்கம் சார்பில் பச்சை தேயிலைக்கு குறைந்தபட்ச விலையாக கிலோ ரூ.50 நிர்ணயிக்க கோரி நிர்வாகிகள் 15 பேர் நேற்று மத்திய மந்திரி எல்.முருகனை நேரில் சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:-
நீலகிரி மாவட்டத்தில் 59,462 ஹெக்டேர் பரப்பளவில் தேயிலை விவசாயம் நடைபெற்று வருகிறது. இதை நம்பி 3 லட்சம் குடும்பங்களும், 2½ லட்சம் தொழிலாளர்களும் உள்ளனர். ஆனால், கடந்த பல ஆண்டுகளாக பச்சை தேயிலை விலை வீழ்ச்சி காரணமாக விவசாயிகளின் பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளது. உரம், பராமரிப்பு செலவு, தொழிலாளர்கள் கூலி ஆகியவற்றிற்கு ஒரு கிலோ பச்சை தேயிலை பறிக்க ரூ.22 முதல் ரூ.23 வரை செலவாகிறது. ஆனால், இந்த விலையை தொழிற்சாலைகள் வழங்குவதில்லை. மேலும் தேயிலை வாரியம் ஜூன் மாதத்திற்கு நிர்ணயித்த குறைந்தபட்ச கொள்முதல் விலை ரூ.14.30 ஆகும். எனவே, சிறு தேயிலை விவசாயிகள் குறைந்தபட்ச கொள்முதல் விலையை வழங்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். தற்போதைய சூழ்நிலையில் ஒரு கிலோ பச்சை தேயிலைக்கு ரூ.50 கொள்முதல் விலையாக நிர்ணயிக்க வேண்டும். குறைந்தபட்ச ஆதரவு விலைப்பட்டியலில் தேயிலையை சேர்க்கவும், பணபயிர் பட்டியலில் தற்போதுள்ள தேயிலையை, விவசாய பயிராக மாற்றி அறிவிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.