'மிக்ஜம்' புயல் எதிரொலி: சென்னையில் இருந்து புறப்படும் 6 ரெயில்கள் ரத்து


மிக்ஜம் புயல் எதிரொலி: சென்னையில் இருந்து புறப்படும் 6 ரெயில்கள் ரத்து
x
தினத்தந்தி 4 Dec 2023 12:01 AM GMT (Updated: 4 Dec 2023 12:09 AM GMT)

'மிக்ஜம்' புயல் எதிரொலியாக சென்னை, செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களுக்கு இன்று 'ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டு உள்ளது.

சென்னை,

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வந்த தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்த புயலுக்கு `மிக்ஜம்' என பெயரிடப்பட்டு உள்ளது. சென்னையில் இருந்து 150 கிலோ மீட்டர் கிழக்கு திசையில் புயல் நிலை கொண்டுள்ளது. இது நெல்லூர்- மசூலிப்பட்டினம் இடையே நாளை மாலை கரையைக் கடக்கும். அப்போது, அதிகபட்சமாக மணிக்கு 80 முதல் 100 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் புயலாக கரையை கடக்கக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

'மிக்ஜம்' புயல் எதிரொலியாக சென்னை, செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகிய 3 மாவட்டங்களுக்கு வானிலை மையம் சார்பில் அதி கனமழைக்கான 'ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் சென்னையில் இருந்து புறப்படும் 6 ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாக ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி சென்னை சென்ட்ரல்- மைசூர் சதாப்தி, சென்னை சென்ட்ரல்-கோவை விரைவு ரெயில், சென்னை சென்ட்ரல்-கோவை சதாப்தி ரெயில், சென்னை சென்ட்ரல்-பெங்களூரு ஏ.சி டபுள் டக்கர் ரெயில், சென்னை சென்ட்ரல்-பெங்களூரு பிருந்தவன் ரெயில், சென்னை சென்ட்ரல்-திருப்பதி சப்தகிரி விரைவு ரெயில் ஆகிய 6 ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரத்தான ரெயில்களின் பயணக்கட்டணம் பயணிகளுக்கு திருப்பி வழங்கப்படும் என்றும் ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.


Next Story