ஓட்டல் அதிபரிடம் ரூ.1½ கோடி மோசடி
ஓட்டல் அதிபரிடம் ரூ.1½ கோடி மோசடி செய்யப்பட்டுள்ளது.
திருச்சி தில்லை நகர் 10-வது குறுக்கு மேற்கு விஸ்தரிப்பு பகுதியை சேர்ந்தவர் ராம்குமார் (வயது 44). இவர் தனக்கு சொந்தமான கிங் பாரடைஸ் என்ற ஓட்டலை ரூ.3 கோடிக்கு விற்பனை செய்தார். அப்போது பொன்னகரில் இயங்கி வரும் தனியார் வங்கியின் உதவி மேலாளர் லெட்சுமிகாந்த் என்பவர் ராம்குமாரை அணுகினார்.
அவரிடம் குறிப்பிட்ட தொகையை தங்களது வங்கியில் டெபாசிட் செய்யும்படி கூறினார். இதையடுத்து ராம்குமாரும், ரூ.1 கோடியே 52 லட்சத்து 46 ஆயிரத்தை தனது பெயரிலும், தனது சகோதரர் அழகுராஜா மற்றும் தாய் லலிதா ஆகியோரின் பெயரிலும் டெபாசிட் செய்தார்.
ஆனால் உதவி மேலாளர் லெட்சுமிகாந்த், வங்கியில் தனியாக ஒரு நடப்பு கணக்கை தொடங்கி ராம்குமார் டெபாசிட் செய்த ரூ.1 கோடியே 52 லட்சத்து 46 ஆயிரத்தை அந்த நடப்பு கணக்கிற்கு மாற்றம் செய்து மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இது பற்றி அறிந்த ராம்குமார் செசன்ஸ் கோர்ட்டு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.