சென்னை விமான நிலையத்தில் ரூ.1 கோடி தங்கம் பறிமுதல்


சென்னை விமான நிலையத்தில் ரூ.1 கோடி தங்கம் பறிமுதல்
x

சென்னை விமான நிலையத்தில் ரூ.1 கோடியே 8 லட்சத்து 46 ஆயிரம் மதிப்புள்ள 2 கிலோ தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

மீனம்பாக்கம்,

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக வந்த தகவலின்பேரில் விமான நிலையத்தில் சுங்க இலாகா அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது கொழும்பில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த இலங்கை பெண் பயணிகள் 4 பேரை சுங்க இலாகா அதிகாரிகள் சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரித்தனர். அதிகாரிகளிடம் 4 பேரும் முன்னுக்குபின் முரணாக பேசினர்.

உள்ளாடைக்குள் தங்கம்

அவர்களது உடைமைகளை சோதனை செய்தபோது அதில் எதுவும் இல்லை. பின்னர் அவர்களை தனியறைக்கு அழைத்துச்சென்று சோதனை செய்தனர். அதில் 4 பேரும் உள்ளாடைகளில் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர்.

இலங்கை பெண் பயணிகள் 4 பேரிடம் இருந்தும் ரூ.80 லட்சத்து 42 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 485 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

ரூ.1 கோடி மதிப்பு

இதேபோல் அபுதாபியில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த வாலிபரின் உள்ளாடையில் மறைத்து வைத்து கடத்தி வந்த ரூ.28 லட்சத்து 4 ஆயிரம் மதிப்புள்ள 518 கிராம் தங்கத்தையும் சுங்க இலாகா அதிகாரிகள் கைப்பற்றினார்கள்.

சென்னை விமான நிலையத்தில் சுங்க இலாகா அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ.1 கோடியே 8 லட்சத்து 46 ஆயிரம் மதிப்புள்ள 2 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 4 இலங்கை பெண்கள் உள்பட 5 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story