கிரிவலப்பாதையில் ரூ.1 கோடியில் அமைந்த தோட்டக்கலை பூங்கா 8-ந் தேதி திறப்பு
திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் ரூ.1 கோடியில் அமைக்கப்பட்ட பூங்காவை அமைச்சர் எ.வ.வேலு திறந்து வைக்க உள்ளதாக அதனை ஆய்வு செய்த கலெக்டர் முருகேஷ் கூறினார்.
திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் ரூ.1 கோடியில் அமைக்கப்பட்ட பூங்காவை அமைச்சர் எ.வ.வேலு திறந்து வைக்க உள்ளதாக அதனை ஆய்வு செய்த கலெக்டர் முருகேஷ் கூறினார்.
அரசு தோட்டக்கலை பூங்கா
திருவண்ணாமலை கிரிவலப்பாதை செங்கம் சாலையில் தோட்டக்கலைத் துறை சார்பில் 9 ஏக்கர் பரப்பளவில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் 2018- 19 நிதியாண்டில் அரசு தோட்டக்கலை பூங்கா அமைக்கப்பட்டு பணிகள் நிறைவடைந்து உள்ளது. இருப்பினும் இந்த பூங்கா மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படவில்லை.
இந்த நிலையில் அரசு தோட்டக்கலை பூங்காவை நேற்று திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேஷ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது அவர் பூங்காவில் ரூ.1 கோடியில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் விவரம் மற்றும் என்னென்ன பணிகள் முடிவடைந்துள்ளது என்பதை பார்வையிட்டார்.
அதன்பின் கலெக்டர் முருகேஷ் கூறியதாவது:-
இந்த தோட்டக்கலை பூங்காவை வருகிற 8-ந் தேதி திறந்து வைத்து பொதுமக்கள் பார்வைக்கு கொண்டு வர வேண்டும். பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு இதனை திறந்த வைக்க உள்ளார்.
அதனால் பூங்காவில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். திருவண்ணாமலையில் போதிய பொழுதுபோக்கு அம்சம் இல்லாததால் இந்த பூங்கா விரைவில் பயன்பாட்டிற்கு வந்தால் போதும் பயனுள்ளதாக அமையும்.
நுழைவுக்கட்டணம்
பூங்காவை பார்வையிட வருகை தரும் பொதுமக்களிடம் தலா ரூ.20 கட்டணமாக வசூலித்தால் இந்த தோட்டக்கலை பூங்காைவ பராமரிக்க ஏதுவாக அமையும்.
மேலும் பூங்காவில் குழந்தைகள் விளையாட்டு உபகரணங்கள் கூடுதலாக அமைக்க வேண்டும்.
கூடுதல் பணியாளர்களை நியமித்து பூங்காவை அடிக்கடி தூய்மை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகளை தோட்டக்கலை அலுவலர்களிடம் கலெக்டர் அறிவுறுத்தினார்.
ஆய்வின்போது தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் அன்பரசு, நகராட்சி ஆணையர் தட்சிணாமூர்த்தி, செயற்பொறியாளர் நீலேஸ்வரன் உள்பட பலர் உடனிருந்தனர்.