ரூ.1½ கோடியில் நலத்திட்ட உதவிகள்

சுல்தான்பேட்டை, ஜூலை.13- செஞ்சேரிபுத்தூரில் நடந்த மக்கள் தொடர்பு முகாமில் ரூ.1½ கோடியில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
சுல்தான்பேட்டை
செஞ்சேரிபுத்தூரில் நடந்த மக்கள் தொடர்பு முகாமில் ரூ.1½ கோடியில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
மக்கள் தொடர்பு முகாம்
சுல்தான்பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட செஞ்சேரிபுத்தூரில் தமிழக அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி மற்றும் மக்கள் தொடர்பு முகாம் நேற்று நடந்தது. இதற்கு சூலூர் வி.பி. கந்தசாமி எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். செஞ்சேரிப்புத்தூர் ஊராட்சி தலைவர் எஸ்.கே.டி. பழனிச்சாமி வரவேற்றார். முகாமில் 93 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 63 லட்சத்து 52 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் கிராந்தி குமார் வழங்கி பேசினார். அப்போது அவர் கூறும்போது, கோவை மாவட்டத்தில் விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டு வருகிறது. பட்டு வளர்ச்சி திட்டங்களுக்கு ரூ.6 லட்சம் வரை மானியம் வழங்கப்பட்டு வருகிறது. ஒரே பயிர்களை விவசாயிகள் தொடர்ந்து பயிரிடுவதை தவிர்த்து மாற்றுப்பயிர்களை பயிரிட வேண்டும் என்றார்.
மகளிர் உரிமைத்தொகை
பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கலெக்டர் கூறுகையில், ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் கொப்பரை தேங்காய் வாங்குவது நிறுத்தப்பட்டு உள்ளது. இதுகுறித்து அரசிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் தீர்வு காணப்படும். கனிம வளங்கள் கடத்தல் தொடர்பாக சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது. மகளிர் உரிமைத்தொகைக்கான கணக்கெடுப்பு பணி, அதற்கான பயோமெட்ரிக் எந்திரங்கள் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது என்றார்.
இதில் மாவட்ட ஊராட்சி தலைவர் சாந்திமதி அசோகன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர்(பொறுப்பு) செல்வம் மற்றும் மக்கள் பிரதிநிதிகள், அரசியல் பிரமுகர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
முன்னதாக வேளாண் மற்றும் தோட்டக்கலை துறை சார்பில் வைக்கப்பட்டு இருந்த கண்காட்சி அரங்கை கலெக்டர் பார்வையிட்டார். முடிவில் தாசில்தார் நித்திலவல்லி நன்றி கூறினார்.






