நகை வியாபாரி வீட்டில் 1½ கிலோ தங்கம் கொள்ளை


நகை வியாபாரி வீட்டில் 1½ கிலோ தங்கம் கொள்ளை
x

நெல்லையில் நகை வியாபாரி வீட்டில் பூட்டை உடைத்து 1½ கிலோ தங்க நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்று உள்ளனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

திருநெல்வேலி

ராஜஸ்தான் மாநிலம் பார்மர் மாவட்டம் சிவாணா பகுதியை சேர்ந்தவர் அனுமந்தர் ராம் (வயது 45). இவர் ஆந்திர மாநிலம் நெல்லூர் பகுதியில் தங்க நகைகளை வாங்கி, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள நகை கடைகளுக்கு விற்பனை செய்து வருகிறார். இதற்காக அவர் நெல்லை சிந்துபூந்துறை செல்விநகர் பகுதியில் ஒரு வீட்டின் மாடியில் கடந்த 10 ஆண்டுகளாக வாடகைக்கு குடியிருந்து வருகிறார்.

கொரோனா காலத்திற்கு பின்னர் இவருடைய உறவினரான ராஜஸ்தானை சேர்ந்த மெஹரா ராம் என்பவர் நெல்லையில் தங்கி கடைகளுக்கு நகைகளை விற்பனை செய்து வந்தார். அனுமந்தர் ராம் 15 நாட்களுக்கு ஒரு முறை நெல்லைக்கு வந்து விற்பனை செய்யப்பட்ட நகைகளின் கணக்குகளை கேட்டு அறிந்து செல்வார்.

கடந்த வாரம் நெல்லூரில் இருந்து 2 கிலோ தங்கம் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டுள்ளது. அதில் ½ கிலோ தங்க நகைகளை கடைகளுக்கு விற்றுவிட்டு 1½ கிலோ நகைகளை ஒரு பிளாஸ்டிக் டப்பாவில் வைத்து பூஜை அறையில் மெஹரா ராம் வைத்துள்ளார். இன்னொரு சிறிய டப்பாவில் சுமார் 200 கிராம் எடையுள்ள நகைகளை வைத்து அதை ஒரு பையில் வைத்திருந்தார்.

நேற்று காலையில் மெஹரா ராம் தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி பகுதியில் உள்ள நகைக்கடைக்கு பணம் வாங்க சென்று விட்டு மாலை 6 மணியளவில் வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் கிரில் கேட் மற்றும் மரக்கதவின் பூட்டுகள் உடைக்கப்பட்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே உள்ளே சென்று பூஜை அறையில் பார்த்தபோது, அங்கு 1½ கிலோ நகைகள் இருந்த பிளாஸ்டிக் டப்பாவை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து நெல்லை சந்திப்பு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே துணை போலீஸ் கமிஷனர் சரவணகுமார், நெல்லை சந்திப்பு உதவி கமிஷனர் ராஜேஷ்வரன், இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். மோப்பநாய் புளூட்டோ வரவழைக்கப்பட்டது. அது சம்பவம் நடந்த இடத்தில் மோப்பம் பிடித்து விட்டு, சுமார் 500 மீட்டர் தொலைவில் உள்ள மெயின் ரோடு வரை ஓடிச்சென்றது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

இந்த துணிகர கொள்ளை சம்பவம் குறித்து நெல்லை சந்திப்பு குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொள்ளையில் ஈடுபட்டவர்கள் யார்? தெரிந்தவர்களே அங்கு வந்து நகைகளை அள்ளி சென்றனரா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். மேலும் நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் சமீபத்தில் கொள்ளை வழக்கில் விடுதலையான நபர்களின் விவரங்களையும் சேகரித்து வருகின்றனர்.

நகை வியாபாரி வீட்டில் கதவை உடைத்து 1½ கிலோ தங்கத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்த சம்பவம் நெல்லையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



Next Story