உரிய ஆவணங்கள் இன்றி ரெயிலில் எடுத்து வரப்பட்ட 1¼ கிலோ நகை, ரூ.37¼ லட்சம் பறிமுதல்


உரிய ஆவணங்கள் இன்றி ரெயிலில் எடுத்து வரப்பட்ட 1¼ கிலோ நகை, ரூ.37¼ லட்சம் பறிமுதல்
x

ரெயிலில் உரிய ஆவணம் இன்றி எடுத்து வரப்பட்ட 1¼ கிலோ தங்க நகை, ரொக்கப்பணம் ரூ.37¼ லட்சம் ஆகியவற்றை ரெயில்வே போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக கோவையை சேர்ந்தவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

ராணிப்பேட்டை

அரக்கோணம்

ரெயிலில் உரிய ஆவணம் இன்றி எடுத்து வரப்பட்ட 1¼ கிலோ தங்க நகை, ரொக்கப்பணம் ரூ.37¼ லட்சம் ஆகியவற்றை ரெயில்வே போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக கோவையை சேர்ந்தவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

ரெயிலில் சோதனை

ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு சட்டத்திற்கு புறம்பாக கஞ்சா, குட்கா, மதுபானம் மற்றும் ஹவாலா பணம் கடத்துவதை தடுக்க அரக்கோணம் ரெயில்வே போலீஸ் எல்லைக்கு உட்பட்ட ரெயில் நிலையங்களுக்கு வரும் ரெயில்களில் ரெயில்வே போலீசார் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர். அதன்படி அரக்கோணம் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆனந்தன், ராமகிருஷ்ணன் மற்றும் போலீசார் அரக்கோணம் வழியாக செல்லும் ரெயில்களில் தொடர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தநிலையில் நேற்று அதிகாலை 3.20 மணியளவில் ஜார்கண்ட் மாநிலம் தன்பாத்தில் இருந்து கேரள மாநிலம் ஆலப்புழா செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் அரக்கோணம் ரெயில் நிலையத்திற்கு வந்தது. அந்த ரெயிலின் பெட்டிகளில் ரெயில்வே போலீசார் ஏறி சோதனை நடத்தினர்.

நகை- பணம் பறிமுதல்

பொது பெட்டியில் சோதனை செய்த போது சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் இருந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் கோயம்புத்தூர், கெம்பட்டி காலனி பகுதியை சேர்ந்த நாகராஜன் (வயது 37) என்பது தெரியவந்தது. தொடர்ந்து அவர் வைத்திருந்த பையை சோதனை செய்த போது அதில் பேப்பரில் சுற்றப்பட்டு கட்டுக் கட்டாக பணம் மற்றும் பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில் தங்க நகைகள் இருந்தன.

அதைத்தொடர்ந்து அவரை ரெயில்வே போலீஸ்நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அங்கு பணத்தை எண்ணி பார்த்ததில் ரூ.37 லட்சத்து 43 ஆயிரம் இருந்தது. அதேபோன்று 1 கிலோ 380 கிராம் தங்க நகைகளும் இருந்தது. பணத்திற்கும், நகைகளுக்கும் உரிய ஆவணங்கள் இல்லை. இதனால் நகை, பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் இது குறித்து விசாரணைக்காக சென்னை வருமான வரித்துறை புலனாய்வு பிரிவு அலுவலர் பாலசந்தரிடம் ரெயில்வே போலீசார் ஒப்படைத்தனர். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


Next Story