தனியார் துறையில் 1 லட்சம் பேருக்கு வேலை
67 வேலைவாய்ப்பு முகாம் மூலம் தனியார் துறையில் இதுவரை 1 லட்சம் பேருக்கு வேலை கிடைத்து உள்ளதாக தொழிலாளர் மற்றும் திறன்மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வி.கணேசன் தெரிவித்து உள்ளார்.
கோவை
67 வேலைவாய்ப்பு முகாம் மூலம் தனியார் துறையில் இதுவரை 1 லட்சம் பேருக்கு வேலை கிடைத்து உள்ளதாக தொழிலாளர் மற்றும் திறன்மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வி.கணேசன் தெரிவித்து உள்ளார்.
ஆலோசனை கூட்டம்
கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில்வருகிற 27-ந் தேதி பொள்ளாச்சியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது. இதையொட்டி அரசு துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் கோவை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.
இதற்கு தொழிலாளர் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வி.கணேசன் தலைமை தாங்கினார். மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி முன்னிலை வகித்தார்.
இதில் மாவட்ட கலெக்டர் சமீரன், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன், மாநகர் மாவட்ட தி.மு.க. செயலாளர் கார்த்திக், மேயர் கல்பனா ஆனந்தகுமார், வருவாய் அதிகாரி லீலா அலெக்ஸ், உதவி கலெக்டர் சவுமியா மற்றும் அரசு துறை அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
வேலை வாய்ப்பு முகாம்
இதைத்தொடர்ந்து அமைச்சர் சி.வி.கணேசன் நிருபர்களிடம் கூறியதாவது:-
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க தமிழக முழுவதும் 234 தொகுதிகளிலும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
இதுவரை 67 இடங்களில் வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு உள்ளது. இதன் மூலம் 1 லட்சத்து 7 ஆயிரம் பேர் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி மகாலிங்கம் கல்லூரியில் வருகிற 27-ந் தேதி வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது. இதில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
71 தொழில் பயிற்சி மையம்
செங்கல்பட்டு மாவட்டத்தில் நடந்த வேலைவாய்ப்பு முகாமில் 72 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்.
இதில் 8,752 பேருக்கு வேலை கிடைத்தது. தமிழகத்தில் 71 தொழில்பயிற்சி மையத்திற் கான கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. நாங்கள் தமிழகத்தில் வேலை இல்லாத இளைஞர்களே இல்லை என்பதை இலக்காக கொண்டு செயல்பட்டு வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது அமைச்சர் செந்தில்பாலாஜி உடன் இருந்தார்.