வயது வந்தோர் கல்வி திட்டத்தின் கீழ் 1 லட்சம் பேர் எழுத்தறிவு பெற்றுள்ளனர்
மாவட்டத்தில் வயது வந்தோர் கல்வி திட்டத்தின் கீழ் 1 லட்சம் பேர் எழுத்தறிவு பெற்றுள்ளனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூர் தியாகராசா தொடக்கப்பள்ளியில் நேற்று 3-வது கட்ட அடிப்படை எழுத்தறிவு தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வினை ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டத்தின் கூடுதல் மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் சிவசக்தி கணேஷ்குமார், மாவட்ட உதவித்திட்ட அலுவலர் ஜோதிமணிராஜன் ஆகியோர் பார்வையிட்டனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-
தமிழகத்தில் 15 வயதிற்கு மேற்பட்ட முற்றிலும் படிக்க மற்றும் எழுதத்தெரியாத அனைவருக்கும் அடிப்படை எழுத்தறிவை வழங்க வேண்டும் என்பதே வயது வந்தோர் கல்வி திட்டத்தின் இலக்காகும். விருதுநகர் மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக 25,015 பேரும், 2-வது கட்டமாக 45,792 பேரும் எழுத்தறிவு பெற்றனர். தற்போது 3-வது கட்டமாக 11 ஒன்றியங்களில் 749 மையங்களில் 29,941 பயனாளிகளுக்கு படிக்க எழுத கற்றுத்தரப்பட்டு இத்தேர்வுகள் நடத்தப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 749 மையங்களிலும் இந்த தேர்வு நடைபெற்றது. இவ்வாறு மாவட்டத்தில் வயது வந்தோர் கல்வி திட்டத்தின் கீழ் 1 லட்சம் பேர் எழுத்தறிவு பெற்றுள்ளனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
ஆய்வின் போது மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் செல்வராஜ், முருகுதிருநாவுக்கரசு ஆகியோர் உடனிருந்தனர்.