விவசாயியின் கவனத்தை திசை திருப்பி ரூ.1½ லட்சம் கொள்ளை


விவசாயியின் கவனத்தை திசை திருப்பி ரூ.1½ லட்சம் கொள்ளை
x

விவசாயியின் கவனத்தை திசை திருப்பி ரூ.1½ லட்சத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்தனர்.

பெரம்பலூர்

வங்கியில் பெற்ற பணம்

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, மங்களமேடு மேற்கு தெருவை சேர்ந்தவர் சோமு (வயது 52). விவசாயி. இவர் நேற்று காலை தான் வங்கி கணக்கு வைத்திருக்கும் பெரம்பலூர் புறநகர் பகுதியான துறைமங்கலத்தில் உள்ள கனரா வங்கியில் 5 பவுன் தங்கக்காசுகளை அடகு வைத்து ரூ.1 லட்சத்து 45 ஆயிரத்தை பெற்றார்.

பின்னர் அவர் அந்த பணத்தை தனது மோட்டார் சைக்கிளில் பெட்ரோல் டேங்க் கவரில் வைத்துக்கொண்டு சொந்த ஊருக்கு புறப்பட்டார். பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தை தாண்டி காலை 11.45 மணியளவில் சென்று கொண்டிருந்தார்.

கவனத்தை திசை திருப்பி...

அப்போது அதே சாலையில் பின்னால் ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரில் ஒருவர் சோமுவிடம் உங்களது பணம் கீழே விழுந்து விட்டது என்று கூறி, அவரின் கவனத்தை திசை திருப்பினர். இதனை நம்பிய சோமுவும் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு இறங்கி சற்று தூரம் நடந்து சென்று பார்த்தார். அப்போது 2 பேரும் சேர்ந்து சோமுவின் மோட்டாா் சைக்கிளில் இருந்த பணத்தை கொள்ளையடித்து கொண்டு, அவர்கள் வந்த மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றனர்.

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த சோமு திருடன்... திருடன்... என்று கூச்சலிட்டார். அவரது சத்தத்தை கேட்ட அந்த வழியாக சென்றவர்களும், அக்கம், பக்கத்தினரும் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றவர்களை பின்தொடர்ந்து விரட்டி சென்றனர். அப்போது அவர்கள் ஒருவரை மோட்டார் சைக்கிளுடன் மடக்கி பிடித்தனர். மற்றொருவர் தப்பி ஓடிவிட்டார்.

போலீசார் விசாரணை

இதையடுத்து பொதுமக்கள், பெரம்பலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் பிடிபட்ட நபரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவரும், அவருடன் வந்தவரும் ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.

அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பியோடிய மற்ெறாருவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பெரம்பலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஏற்கனவே அந்த வங்கி முன்பு 2 வாடிக்கையாளர்கள் இருசக்கர வாகனங்களில் வைத்திருந்த பணத்தை மர்மநபர்கள் திருடிச்சென்ற சம்பவம் அரங்கேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story