1½ டன் புகையிலை பொருட்கள் பறிமுதல்
கோவை பெரியகடை வீதியில் 1½ டன் புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
கோவை
கோவை பெரியகடை வீதியில் 1½ டன் புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
போலீசார் ரோந்து
கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் கோவை பெரியகடை வீதியில் போலீசார் நேற்று ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அந்த வழியாக சந்தேகத்திற்கிடமான வகையில் வந்த சரக்கு வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அந்த வாகனத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மூட்டை, மூட்டையாக இருந்தது.
இதையடுத்து போலீசார் அந்த வாகனத்தில் வந்த 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர்கள், கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த முல்லாராம் (வயது 30), தல்லாராம் (30), சுஜாராம் (27) ஆகியோர் என்பது தெரியவந்தது.
கைது
தொடர்ந்து அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த 1½ டன் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட சரக்கு வாகனம், ஒரு கார் மற்றும் ரூ.6 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும் பிடிபட்ட 3 பேரையும் கைது செய்து போலீசார் நடத்திய விசாரணையில், அவர்கள் கோவையில் உள்ள கடைகளுக்கு சரக்கு வாகனத்தில் புகையிலை பொருட்களை கடத்தி வந்து வினியோகம் செய்து வந்தது தெரியவந்தது. தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.
பின்னணியில் யார்?
இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-
கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட புகையிலை, கஞ்சா உள்ளிட்ட போதை தரும் பொருட்களின் விற்பனையை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது. தற்போது கோவை மாநகரில் ஒவ்வொரு கடைகளுக்கும் சென்று புகையிலை பொருட்கள் விற்பனை செய்து வந்த 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இவர்களிடம் எங்கிருந்து புகையிலை பொருட்களை கடத்தி வந்தனர், இதன் பின்னணியில் யாரெல்லாம் உள்ளனர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், கஞ்சா விற்பனை குறித்து தகவல் கிடைத்தால் பொதுமக்கள் அது குறித்து போலீசாரிடம் தெரிவிக்கலாம். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.