மினி பஸ் கண்டக்டரை பீர் பாட்டிலால் தாக்கியவருக்கு ஒரு ஆண்டு சிறை


மினி பஸ் கண்டக்டரை பீர் பாட்டிலால் தாக்கியவருக்கு ஒரு ஆண்டு சிறை
x

கும்பகோணத்தில் மினி பஸ் கண்டக்டரை பீர் பாட்டிலால் தாக்கியவருக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை விதித்து கும்பகோணம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

தஞ்சாவூர்

கும்பகோணத்தில் மினி பஸ் கண்டக்டரை பீர் பாட்டிலால் தாக்கியவருக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை விதித்து கும்பகோணம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

மினி பஸ் கண்டக்டர்

கும்பகோணம் அருகே செட்டி மண்டபம் அஞ்சுகம் நகர் பகுதியை சேர்ந்தவர் சுப்பராயன் மகன் அமுதன் (வயது23). மினி பஸ் கண்டக்டர். இவர் கடந்த ஆண்டு (2022) ஜூலை மாதம் 4-ந் தேதி மினி பஸ்சில் பணியில் இருந்தபோது, வாலிபர் ஒருவர் பஸ் படிக்கட்டில் நின்று பயணம் செய்துள்ளார்.

அந்த வாலிபரை அமுதன் பஸ்சுக்குள் வருமாறு அழைத்த போது அந்த வாலிபர் உள்ளே வராமல் அமுதனிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். மேலும் பஸ்சில் டிக்கெட் எடுக்காமல் பாதி வழியிலேயே இறங்கி உள்ளார்.

பீர் பாட்டிலால் தாக்குதல்

பின்னர் அந்த மினி பஸ் எலுமிச்சங்காபாளையம் பஸ் நிறுத்தத்தில் நின்ற போது அமுதனிடம் தகராறில் ஈடுபட்ட வாலிபர் மீண்டும் அங்கு வந்து அமுதனை தகாத வார்த்தைகள் கூறி திட்டி பீர் பாட்டிலால் அவரைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். பின்னர் அவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதனால் படுகாயம் அடைந்த அமுதனை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இதுதொடர்பாக அமுதன் கும்பகோணம் தாலுகா போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அமுதனை தாக்கியவர் தாராசுரம் மிஷன் தெருவை சேர்ந்த வீரையன் மகன் அய்யப்பன் (20) என்பது தெரியவந்தது.

சிறை தண்டனை

இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு தொடர்பான விசாரணை கும்பகோணம் கோர்ட்டில் நடந்து வந்தது. இதில் நீதிபதி பாரதிதாசன், அய்யப்பனுக்கு ஒரு ஆண்டு, சிறை தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். அபராத தொகையை செலுத்த தவறினால் மேலும் 9 மாதங்கள் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.


Next Story