பென்னாகரம், பாப்பாரப்பட்டி பகுதிகளில் ரூ.10½ கோடியில் வளர்ச்சி திட்டப்பணிகள்-கலெக்டர் சாந்தி நேரில் ஆய்வு


பென்னாகரம், பாப்பாரப்பட்டி பகுதிகளில் ரூ.10½ கோடியில் வளர்ச்சி திட்டப்பணிகள்-கலெக்டர் சாந்தி நேரில் ஆய்வு
x
தினத்தந்தி 14 Dec 2022 6:45 PM GMT (Updated: 14 Dec 2022 6:47 PM GMT)
தர்மபுரி

தர்மபுரி:

பென்னாகரம், பாப்பாரப்பட்டி பகுதிகளில் ரூ.10½ கோடியில் நடந்து வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் சாந்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

புதிய பஸ் நிலையம்

தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தில் மூலதன மானிய நிதி திட்டத்தின் கீழ் ரூ.4 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் புதிய பஸ் நிலையம் கட்டும் பணி நடந்து வருகிறது. இதேபோல் 15-வது நிதிக்குழு அடிப்படை மானியம் 2-வது தவணை திட்டத்தின் கீழ் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் பென்னாகரம் சிறுவர் பூங்காவை மேம்படுத்தும் பணி நடந்து வருகிறது. இந்த பணிகளை கலெக்டர் சாந்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதேபோல் பாப்பாரப்பட்டியில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.2 கோடியே 74 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் வாரச்சந்தை மேம்பாட்டு பணி, அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ் ரூ.2 கோடியே 23 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பாப்பாரப்பட்டி சின்ன ஏரி சீரமைப்பு பணி ஆகியவற்றையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தரமாக முடிக்க வேண்டும்

வாத்தி மருதஅள்ளியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.30 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய குளம் அமைக்கும் பணி, 15-வது நிதிக்குழு திட்டத்தின் கீழ் ரூ.7 லட்சத்து 29 ஆயிரம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி உள்பட மொத்தம் ரூ.10 கோடியே 60 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை பார்வையிட்டார்.

இந்த பணிகளை தரமாக மேற்கொள்ள வேண்டும். குறித்த காலத்தில் விரைவாக முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்று அப்போது அவர் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

ஆய்வின்போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வடிவேலன், ரங்கநாதன், பேரூராட்சி தலைவர்கள் வீரமணி, பிருந்தா, செயல் அலுவலர் கோமதி, இளநிலை பொறியாளர் பழனி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், தொடர்புடைய அலுவலர்கள் உடன் இருந்தனர்.


Next Story