விழுப்புரம் பழைய பஸ் நிலைய வணிக வளாக கடைகளின் மேற்கூரையில் 10 நாட்களாக தேங்கி நிற்கும் மழைநீர்; நகராட்சி நிர்வாகம் அலட்சியமாக இருப்பதாக வியாபாரிகள் குற்றச்சாட்டு
விழுப்புரம் பழைய பஸ் நிலைய வணிக வளாக கடைகளின் மேற்கூரையில் 10 நாட்களாக மழைநீர் தேங்கி நிற்பதாகவும், இதை வெளியேற்ற நடவடிக்கை எடுக்காமல் நகராட்சி நிர்வாகம் அலட்சியமாக இருப்பதாகவும் வியாபாரிகள் குற்றம்சாட்டினர்.
தேங்கி நிற்கும் மழைநீர்
விழுப்புரம் பழைய பஸ் நிலையத்தில் நகராட்சி நிர்வாகம் சார்பில் வணிக வளாகம் கட்டப்பட்டு வாடகைக்கு விடப்பட்டுள்ளன. அந்த வணிக வளாகங்களில் 50-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. விழுப்புரம் நகரில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்த மழையின் காரணமாக இந்த வணிக வளாக கடைகளின் மேற்கூரை பகுதியில் மழைநீர் தேங்கி நிற்கிறது. மழைநீர் வடிவதற்கான குழாய்களில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் தண்ணீர் வடியாமல் கடைகளின் மாடியிலேயே கடந்த 10 நாட்களாக தேங்கி நிற்கிறது. அவ்வாறு தேங்கி நிற்கும் தண்ணீரில் கொசுக்கள் உற்பத்தியாவதால் டெங்கு, மலேரியா போன்ற நோய்கள் ஏற்படும் நிலை உள்ளது.
கடைக்குள் ஒழுகும் தண்ணீர்
மேலும் தேங்கி நிற்கும் மழைநீர், கட்டிடத்திற்குள் கசிவு ஏற்பட்டு ஒழுகுகிறது. இதனால் கடைகளில் உள்ள பொருட்கள், தண்ணீரில் நனைந்து வீணாகி வருவதால் அங்குள்ள வியாபாரிகளின், வியாபாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டு வருவதோடு, பெரும் நஷ்டத்தையும் சந்தித்து வருகின்றனர்.
இதுபற்றி அங்குள்ள கடை வியாபாரிகள், நகராட்சி அதிகாரிகளிடம் நேரில் சென்று வலியுறுத்தியபோதிலும் வணிக வளாக கடைகளின் மேற்கூரை பகுதியில் தேங்கி நிற்கும் மழைநீரை வெளியேற்ற எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. கொசுக்களை கட்டுப்படுத்தி நோய் பரவாமல் தடுக்க வேண்டிய நகராட்சி நிர்வாகமே, தண்ணீரை தேங்க வைத்து நோயை பரப்ப வழிவகை செய்வதாக அங்குள்ள வியாபாரிகள் குற்றம்சாட்டுகின்றனர். அதோடு லட்சக்கணக்கில் வரிவசூல் செய்யும் நகராட்சி நிர்வாகத்தினர், அரசு கட்டிடங்களை முறையாக பராமரிப்பு செய்வதில்லை எனவும் அவர்கள் குற்றம்சாட்டினர்.
நடவடிக்கை எடுக்கப்படுமா?
ஆகவே நகராட்சி அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு பழைய பஸ் நிலையத்தில் உள்ள வணிக வளாக கடைகளின் மேல்பகுதியில் தேங்கி நிற்கும் மழைநீரை வெளியேற்ற செய்வதோடு, இனிவரும் காலங்களிலும் இதுபோன்ற நிலைமை ஏற்படாமல் இருக்க நிரந்தர நடவடிக்கையை எடுக்க வேண்டுமென அங்குள்ள வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.