வேன் கவிழ்ந்து விவசாய தொழிலாளர்கள் 10 பேர் படுகாயம்
கறம்பக்குடி அருகே வேன் கவிழ்ந்து விவசாய தொழிலாளர்கள் 10 பேர் படுகாயமடைந்தனர்.
பள்ளத்தில் கவிழ்ந்த வேன்
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே மழையூர் கருப்பட்டி பட்டி, மேட்டுபட்டியை சேர்ந்த தொழிலாளர்கள் கிருஷ்ணம்பட்டி, கந்தர்வகோட்டை பகுதிகளில் நாற்று நடவு பணிக்கு செல்வது வழக்கம். இதேபோல் நேற்று நடவு வேலையை முடித்துவிட்டு வேனில் ஊர் திரும்பி கொண்டிருந்தனர்.
வேன் கிருஷ்ணம்பட்டி சாலையில் சென்றபோது எதிரே போதிய வெளிச்சம் இன்றி வண்டல் மண் ஏற்றிவந்த டிராக்டர் வரவே வேன் டிரைவர் வேனை சாலையிலிருந்து கிழே இறக்க முயன்றார். இதில் எதிர்பாராதவிதமாக வேன் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.
10 பேர் படுகாயம்
இதையடுத்து வேனில் இருந்த 15-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வெளியே வரமுடியாமல் அலறினர். இதை கண்ட அக்கம் பக்கம் உள்ளவர்கள் உடனடியாக அங்கு சென்று வேனில் சிக்கி இருந்த தொழிலாளர்களை மீட்டனர். பின்னர் அப்பகுதி இளைஞர்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் கறம்பக்குடி, மழையூர், ஆலங்குடி பகுதிகளில் இருந்து ஆம்புலன்ஸ்கள் விரைந்து வந்து காயமடைந்தவர்களை மீட்டு மழையூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.
அங்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த விபத்தில் சின்னபொண்ணு (வயது 50), செல்வராஜ் (40), இளங்கோவன் (40), ஆறுமுகம் (42) உள்பட 10 பேர் படுகாயமடைந்தனர். மேலும் இந்த விபத்து குறித்து மழையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.