நாகை-மயிலாடுதுறை மாவட்டங்களை சேர்ந்த 10 மீனவர்கள் சிறைபிடிப்பு
ல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றனர்.
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றனர்.
அடிக்கடி நடந்து வருகிறது
தமிழகத்தை சேர்ந்த மீனவர்கள், கடலில் மீன்பிடிக்கும்போது எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி சிறைபிடிக்கும் சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது.
கடந்த 10-ந்தேதி நடுக்கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த நாகை மீனவர்கள் 9 பேரை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்து சென்றனர். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் மீண்டும் நாகை, மயிலாடுதுறை மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படையினர் நேற்று சிறை பிடித்து சென்ற சம்பவம் மீனவர்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
10 மீனவர்கள் சிறைபிடிப்பு
நாகை அக்கரைப்பேட்டையை சேர்ந்தவர் கலையரசன்(வயது 40). இவருக்கு சொந்தமான விசைப்படகில் இவரும், அக்கரைப்பேட்டையை சேர்ந்த சஞ்சிகண்ணு, ஆனந்த், கமலநாதன், ராஜா மற்றும் மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகாரை சேர்ந்த ஆகாஷ், ரீகன், பிரவீன் ஆகியோர் உள்பட 10 மீனவர்கள் நாகை அக்கரைப்பேட்டை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த 20-ந்தேதியன்று விசைப்படகில் மீன்பிடிக்க சென்றனர்.
இவர்கள், கோடியக்கரைக்கு தென்கிழக்கே முல்லைத்தீவு அருகே நடுக்கடலில் மீன்பிடித்துக்கொண்டு இருந்தனர். அப்போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி நாகை, மயிலாடுதுறையை சேர்ந்த 10 மீனவர்களையும் சிறைபிடித்தனர்.
பின்னர் மீனவர்களை கைது செய்ததுடன், அவர்கள் வந்த விசைப்படகையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்து திரிகோணமலைக்கு கொண்டு சென்றனர்.
ஒரே மாதத்தில் 2 சம்பவங்கள்
நடுக்கடலில் மீன் பிடித்துக்கொண்டு இருந்த நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்ற சம்பவம் நாகை, மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஒரே மாதத்தில் இதுபோன்ற 2 சிறைபிடிப்பு சம்பவங்கள் நடந்து உள்ளதால் நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் மிகுந்த கவலையில் ஆழ்ந்து உள்ளனர். உயிரை பணயம் வைத்து தொழில் செய்யும் தங்களால் நிம்மதியாக தொழில் செய்ய விடாமல் இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தொல்லை கொடுத்து வருவதால் தங்களுக்கு ஏற்பட்டு வரும் சொல்லொணா துயரத்திற்கு எப்போதுதான் தீர்வு கிடைக்குமோ? என்று வேதனை தெரிவித்தனர்.
கோரிக்கை
எனவே இனிமேலும் இதுபோன்ற சம்பவங்கள் தொடராத வண்ணம் தாங்கள் நிம்மதியாக கடலுக்கு சென்று மீன்பிடித்து வர உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு தமிழக மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.