மீன்பிடிப்பதில் பயங்கர மோதல் அ.தி.மு.க. பிரமுகர் கொலை வழக்கில் 10 மீனவர்களுக்கு ஆயுள் தண்டனைகடலூர் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு


மீன்பிடிப்பதில் பயங்கர மோதல் அ.தி.மு.க. பிரமுகர் கொலை வழக்கில் 10 மீனவர்களுக்கு ஆயுள் தண்டனைகடலூர் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு
x

மீன்பிடிப்பதில் இரு கிராம மீனர்களிடையே ஏற்பட்ட பயங்கர மோதலில் அ.தி.மு.க. பிரமுகர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் 10 மீனவர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து கடலூர் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு கூறியது.

கடலூர்

கடலூர் தேவனாம்பட்டினம் மீனவர்களுக்கும், சோனாங்குப்பம் மீனவர்களுக்கும் கடலில் மீன்பிடிப்பது தொடர்பாக தகராறு இருந்து வந்தது.

மீன்பிடிப்பதில் தகராறு

கடந்த 15.5.2018 அன்று காலை தேவனாம்பட்டினம் மீனவர்கள், சோனாங்குப்பம் பகுதியில் உள்ள கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது, தேவனாம்பட்டினம் மீனவர்களுக்கும், சோனாங்குப்பம் மீனவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

வெட்டிக் கொலை

பின்னர் இது, இரு மீனவ கிராம மீனவர்களிடையே மோதலாக மாறியது. இதில் கத்தி, அரிவாள், சுளுக்கி போன்ற பயங்கர ஆயதங்களுடன் மீனவர்கள் மோதிக்கொண்டனர். இந்த மோதலில் சோனாங்குப்பத்தை சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகரும், மீனவருமான பஞ்சநாதன் சுளுக்கியால் குத்தியும், கத்தியால் வெட்டியும் கொலை செய்யப்பட்டார்.

மேலும் சோனாங்குப்பத்தை சேர்ந்த பாண்டியன், முனியம்மாள், ஏலாயி, இளவரசன் ஆகிய 4 பேர் படுகாயங்களுடன் உயிர் தப்பினர்.

21 பேர் கைது

இந்த சம்பவம் தொடர்பாக பஞ்சநாதன் மகன் பைந்தமிழ்குமரன் கடலூர் துறைமுகம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தேவனாம்பட்டினத்தை சேர்ந்த தம்பிராஜ் மகன் ஆறுமுகம் (வயது 41), கன்னியப்பன் மகன் கந்தன் (40), ஏழுமலை மகன் சுரேந்தர் (38), பிச்சவரதன் மகன் ஓசைமணி (30), சதீஷ் (36), சண்முகம் மகன் சரண்ராஜ் (46), மகிபால் மகன் சுகா என்கிற சுதாகர் (46), கதிரொளி (60), விவேகானந்தன் (38), சுப்பிரமணி என்ற எதிர்வேல் (59), குப்புராஜ் மகன் தினகரன், அருள்தாஸ் (63), தனஜெயன் மகன் தென்னரசு என்கிற குமரன் (32), சண்முகம் (70), ஸ்டாலின் (70), அய்யனாரப்பன் (60), பலராமன் (32), சுந்தர் (43), ஜீவா(40), சுப்பிரமணி மகன் முத்துக்குமார் (38), நாராயணன் மகன் ஆறுமுகம் ஆகிய 21 பேரை கைது செய்தனர்.

கோர்ட்டில் வழக்கு விசாரணை

இந்த வழக்கு கடலூர் முதலாவது கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கு விசாரணை நடந்த போதே தினகரன் இறந்து விட்டார்.

இதையடுத்து 20 பேர் மீதான குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு வழக்கு விசாரணை நடந்தது. இவ்வழக்கில் விசாரணை முடிவடைந்து கடந்த பிப்ரவரி மாதம் தீர்ப்பு வழங்குவதாக இருந்தது.

ஆனால் அதன்பிறகும், இவ்வழக்கில் சில முக்கிய சாட்சியங்கள், அதிகாரிகள் விசாரணைக்கு ஆஜர்படுத்தப்பட்டனர். எனவே குற்றம் சாட்டப்பட்ட 20 பேரிடமும் மீண்டும் விசாரணை நடத்தப்பட்டது. இந்த வழக்கில் அனைத்து விசாரணைகளும் முடிவடைந்து, தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது.

போலீஸ் பாதுகாப்புடன் ஆஜர்

இந்நிலையில் இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று காலை குற்றம் சாட்டப்பட்ட 20 பேரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கடலூர் முதலாவது கூடுதல் மற்றும் மாவட்ட அமர்வு நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டனர்.

தொடர்ந்து அவர்கள் நீதிபதி பிரகாஷ் முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களில் ஆறுமுகம், கந்தன், சுரேந்தர், ஓசைமணி, சரண்ராஜ், சுதாகர், சுப்பிரமணி, தென்னரசு, ஸ்டாலின், முத்துக்குமார் ஆகிய 10 பேரிடம் நீங்கள் இந்த கொலை வழக்கில் குற்றவாளி என்று கூறினார்.

குற்றவாளி என்று உறுதி

பின்னர் அவர்களிடம் ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா? என்று நீதிபதி கேட்டார். முதலில் ஆறுமுகம், நான் கொலை செய்யவில்லை என்றார். இதை கேட்ட நீதிபதி, நீங்கள் குற்றவாளி என்று உறுதியாகி விட்டது.

தண்டனை பற்றி ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா? என்றார். அதற்கு அவர் குறைந்தபட்ச தண்டனை வழங்குமாறு கூறினார். இதேபோல் மற்ற 9 பேரும் தங்களுக்கான காரணங்களை கூறி தண்டனையை குறைக்குமாறு கூறினர். இதையடுத்து தண்டனை விவரத்தை மாலை 3 மணிக்கு பிறகு அறிவிப்பதாக நீதிபதி கூறினார்.

10 மீனவர்களுக்கு ஆயுள் தண்டனை

இதனை தொடர்ந்து மாலை 4.30 மணிக்கு மீண்டும் 20 பேரும் கோர்ட்டில் நீதிபதி முன்பு ஆஜராகினர். இதையடுத்து குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட 10 பேருக்கும் தண்டனை விவரத்தை நீதிபதி அறிவித்தார். அவர் தனது தீர்ப்பில், குற்றம் நிரூபிக்கப்பட்டதால் ஆறுமுகம், கந்தன், சுரேந்தர், ஓசைமணி, சரண்ராஜ், சுதாகர், சுப்பிரமணி, தென்னரசு, ஸ்டாலின், முத்துக்குமார் ஆகிய 10 மீனவர்களுக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

மற்ற 10 மீனவர்களும் விடுதலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் அரசு சிறப்பு வக்கீல் சந்திரசேகரன் ஆஜரானார்.


Next Story