தெருநாய்கள் கடித்து 10 ஆடுகள் பலி
சின்னியம்பாளையம் அருகே தெருநாய்கள் கடித்து 10 ஆடுகள் பலியானது.
சின்னியம்பாளையம்
கோவையை அடுத்த சின்னியம்பாளையம் வெங்கட்டாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கணேஷ் குமார் (வயது 35). இவர் அந்த பகுதியில் விவசாயம் செய்து வருவதுடன், தனது ஆடு, மாடுகளை வளர்த்து வந்தார். இந்த நிலையில் நேற்று அதிகாலை பட்டியில் இருந்த ஆடுகள் கத்தும் சத்தம் கேட்டது.
இதையடுத்து கணேஷ்குமார் அங்கு சென்று பார்த்தார். அப்போது 4-க்கும் மேற்பட்ட தெருநாய்கள் ஆடுகளை கடித்து குதறியபடி இருந்தது. இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள், தெருநாய்களை அங்கிருந்து விட்டுவிட்டு, பட்டிக்குள் சென்று பார்த்தார். அப்போது நாய்கள் கடித்ததில் 10 ஆடுகள் இறந்து கிடந்தன. இறந்து கிடந்த ஆடுகளை பார்த்து கணேஷ்குமார் கண் கலங்கினார். மேலும் காயமடைந்த 2 ஆடுகளை மீட்டு, சிகிச்சைக்கு அனுப்பி வைத்தார். இதுகுறித்து உடனடியாக கால்நடை மருத்துவர், கிராம நிர்வாக அதிகாரி மற்றும் சூலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து அங்கு வந்த அதிகாரிகள் இறந்து கிடந்த ஆடுகளை பார்வையிட்டனர். கால்நடை மருத்துவர் பரிசோதனை செய்ததில் தெருநாய்கள் கடித்து ஆடுகள் இறந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து இறந்த அனைத்து ஆடுகளும் குழி தோண்டி அங்கேயே புதைக்கப்பட்டது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.