நீலகிரியில் 5 நாட்கள் பெய்த மழைக்கு 10 வீடுகள் சேதம்-22 இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன


தினத்தந்தி 8 July 2023 5:00 AM IST (Updated: 8 July 2023 5:00 AM IST)
t-max-icont-min-icon

நீலகிரியில் கடந்த 5 நாட்களில் பெய்த மழைக்கு 10 வீடுகள் சேதம் அடைந்தன. 22 இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன.

நீலகிரி

ஊட்டி

நீலகிரியில் கடந்த 5 நாட்களில் பெய்த மழைக்கு 10 வீடுகள் சேதம் அடைந்தன. 22 இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன.

நீலகிரியில் கனமழை

தமிழகத்தில் நீலகிரி மற்றும் கோவை உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3-ந் தேதி முதல் 7-ந்தேதி வரை 5 நாட்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. அதன்படி நீலகிரி மாவட்டத்தில் மழை பாதிப்புகள் ஏற்பட்டால் அவற்றை சமாளிக்க அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு படையினர் 43 பேரும் கோவை ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து தீயணைப்பு படையினர் 32 பேரும் ஊட்டிக்கு வந்தனர்.

வானிலை ஆய்வு மையம் எச்சரித்தபடி 4-ந்தேதி நள்ளிரவு முதல்மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் நீலகிரியில் நேற்று முன்தினம் 6 தாலுகாக்களுக்கும் நேற்று 4 தாலுகாக்களுக்கும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து கலெக்டர் அம்ரித் உத்தரவிட்டார்.

20 சென்டிமீட்டர் மழை பதிவு

மாவட்டம் முழுவதும் அவலாஞ்சியில் அதிக அளவு மழை பெய்தது அதிகபட்சமாக நேற்று முன்தினம் 20 சென்டிமீட்டர் மழை பதிவானது. 5 நாட்கள் பெய்த இந்த மழை காரணமாக இந்த மழை காரணமாக ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, குந்தா, கூடலூர், பந்தலூர் ஆகிய 6 தாலுகாக்களிலும் சேர்த்து சாலைகளில் 22 மரங்கள் சாய்ந்து விழுந்தன. 9 வீடுகள் பாதி அளவு, ஒரு வீடு முற்றிலும் என 10 வீடுகள் சேதம் அடைந்தது. வீடுகள் சேதத்திற்கு ரூ.4100 உடனடியாக பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது. ஒருவர் படுகாயம் அடைந்தார். இரண்டு இடங்களில் தடுப்புச் சுவர் சேதம் அடைந்தது.

நேற்று மாவட்டம் முழுவதும் குளிரான காலநிலை நிலவியது. கடும் பனிமூட்டம் நிலவியது. இதனால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி சென்றனர்.

குன்னூர், கோத்தகிரி தாலுகாவில் மற்றும் பள்ளிகளுக்கு விடுமுறை விடாதால் பள்ளி மாணவ -மாணவிகள் லேசாக அவதிப்பட்டனர். இதற்கிடையே மழை இன்று முதல் குறைய வாய்ப்பு இருப்பதாகவும், வழக்கமான தென்மேற்கு பருவமழை மட்டும் இருக்கும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேபோல் கடந்த ஜூன் மாதம் 1-ந் தேதி முதல் தற்போது வரை பெய்த மழைக்கு மொத்தமாக 18 வீடுகள் சேதம் அடைந்துள்ளன. 33 இடங்களில் மரங்கள் விழுந்துள்ளன.

1 More update

Next Story