ராமேசுவரம் கோவிலுக்கு 10 கி.மீ. தூரம் நடந்து செல்லும் பக்தர்கள்


ராமேசுவரம் கோவிலுக்கு 10 கி.மீ. தூரம் நடந்து செல்லும் பக்தர்கள்
x

பஸ்நிலையம்-கோவிலுக்கு செல்லும் அரசு டவுன்பஸ்கள் நிறுத்தப்பட்டதால் ராமேசுவரம் கோவிலுக்கு 10 கி.மீ.தூரம் மூட்டை முடிச்சுகளுடன் பக்தர்கள் நடந்து செல்கிறார்கள். எனவே பஸ்கள் விடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பயணிகள் வலியுறுத்தி உள்ளனர்.

ராமநாதபுரம்

ராமேசுவரம்,

பஸ்நிலையம்-கோவிலுக்கு செல்லும் அரசு டவுன்பஸ்கள் நிறுத்தப்பட்டதால் ராமேசுவரம் கோவிலுக்கு 10 கி.மீ.தூரம் மூட்டை முடிச்சுகளுடன் பக்தர்கள் நடந்து செல்கிறார்கள். எனவே பஸ்கள் விடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பயணிகள் வலியுறுத்தி உள்ளனர்.

மண்டபம் வரை ரெயில்கள்

அகில இந்திய புண்ணிய தலங்களில் ஒன்றாக கருதப்படும் ராமேசுவரம் கோவிலுக்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் கார், பஸ் மற்றும் ரெயில்கள் மூலமாகவும் வந்து செல்கின்றனர்.

இதனிடையே பாம்பன் ரெயில் பாலத்தின் மையப்பகுதியில் உள்ள தூக்குப்பாலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக ராமேசுவரம் வரும் அனைத்து ரெயில்களும் மண்டபம் மற்றும் ராமநாதபுரம் வரை மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன. அதுபோல் சென்னையில் இருந்து ராமேசுவரத்திற்கு வரும் 2 ரெயில்களும் மண்டபம் வரை மட்டுமே இயக்கப்பட்டு மீண்டும் அங்கிருந்தே சென்னைக்கு புறப்பட்டு செல்கின்றன.

பஸ்கள் நிறுத்தம்

இதனால் ரெயில் பயணிகளுக்காக ராமேசுவரம் அரசு போக்குவரத்து கழக பணிமனை சார்பில் பல அரசு பஸ்கள் மண்டபம் ரெயில் நிலையம்-ராமேசுவரம் ரெயில் நிலையத்திற்கும் இடையே இயக்கப்பட்டு வருகின்றன.

ராமேசுவரம் ரெயில் நிலையத்திலிருந்து மண்டபத்திற்கு அரசு பஸ்கள் இயக்கப்படுவது வரவேற்க கூடிய விஷயம் தான். அதற்காக ராமேசுவரம் பஸ் நிலையத்திலிருந்து-கோவிலுக்கும் மற்றும் தனுஷ்கோடி பகுதிக்கும் இயக்கப்பட்ட பல அரசு பஸ்களை நிறுத்தி அந்த பஸ்களை மண்டபம் ெரயில் நிலையத்துக்கு இயக்கப்படுகின்றன.

இது மட்டுமல்லாமல் பாம்பன்-ராமேசுவரம் வேர்க்கோடு இடையே இயக்கப்பட்டு வந்த பல அரசு பஸ்களும் தற்போது நிறுத்தப்பட்டு மண்டபம் ரெயில் நிலையம்-ராமேசுவரம் ரெயில்நிலையத்திற்கு இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் கடந்த 2 வாரத்திற்கு மேலாகவே வெளியூர்களில் இருந்து அரசு பஸ்களில் வரும் சுற்றுலா பயணிகள், பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பஸ் நிலையத்திலிருந்து ராமேசுவரம் நகருக்குள்ளும் மற்றும் கோவில் அக்னி தீர்த்த கடற்கரைக்கும் ஆட்டோ, கார் உள்ளிட்ட வாடகை வாகனங்களில் அதிக கட்டணம் கொடுத்து செல்ல வேண்டிய நிைல உள்ளது.

பயணிகள், பக்தர்கள் அவதி

இது குறித்து பொதுமக்கள் கூறும் போது, பயணிகளின் சேவைக்காக தான் அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. ராமேசுவரம் பஸ் நிலையம்-கோவிலுக்கு இயக்கப்படும் அரசு பஸ்கள் நிறுத்தப்பட்டு உள்ளதால் வசதி படைத்தவர்கள் கூடுதல் பணம் கொடுத்து வாடகை வாகனங்களில் சென்று விடுவார்கள். ஆனால் பஸ்களில் பயணம் செய்யும் ஏழை, எளிய மக்கள், கைக்குழந்தைகள், முதியோர்கள் ஆகியோர் கடந்த 2 வார காலமாக நடந்தே செல்கின்றனர். பஸ் நிலையத்தில் இருந்து ேகாவிலுக்கு சுமார் 10 கி.மீ. தூரத்துக்கு ஏராளமான பக்தர்கள் மூட்டை முடிச்சுகளுடன், குழந்தைகளுடன் கொளுத்தும் வெயிலில் நடந்து செல்கிறார்கள். எனவே நிறுத்தப்பட்ட அரசு பஸ்களை மீண்டும் பஸ் நிைலயத்தில் இருந்து கோவிலுக்கு இயக்க மாவட்ட நிர்வாகம், போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


Related Tags :
Next Story