நொய்யலாற்றை மீட்க 10 லட்சம் பேரிடம் கையெழுத்து
நொய்யலாற்றை மீட்க 10 லட்சம் பேரிடம் கையெழுத்து
கோவை
நொய்யலாற்றை மீட்க 10 லட்சம் பேரிடம் கையெழுத்து பெறப்படும் என்று பசுமை தாயகம் அமைப்பின் தலைவர் சவுமிய அன்புமணி கோவையில் தெரிவித்தார்.
கலந்துரையாடல் கூட்டம்
பசுமை தாயகம் அமைப்பு சார்பில் நொய்யலாறு மீட்பு குறித்த கருத்துரையாடல் கூட்டம் கோவை விமான நிலையம் அருகே உள்ள தனியார் ஓட்டல் அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பசுமை தாயகத்தின் தலைவர் சவுமியா அன்புமணி தலைமை தாங்கினார். இதில் சிறுதுளி அமைப்பின் நிர்வாகி வனிதா மோகன், விவசாயிகள், தொழிற்துறையினர், சுற்றுச்சூழல் மற்றும் சமூக ஆர்வலர்கள் மற்றும் குளங்கள் பாதுகாப்பு குழுக்கள் உள்பட பல்வேறு தரப்பினர் கலந்து கொண்டு தங்களது கருத்துகளை எடுத்து கூறினர்.
இதன்பின்னர் நிருபர்களுக்கு சவுமியா அன்புமணி பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கொங்கு செழித்தால் எங்கும் செழிக்கும் என்ற பழமொழி இருக்கிறது. அதனால் கொங்கு செழிக்கட்டும், நொய்யல் செழிக்கட்டும் என்கிற முழக்கத்துடன் கடந்த மாதம் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நொய்யல் ஆற்றை மீட்பது குறித்த கூட்டம் கோவையில் நடைபெற்றது.
கையெழுத்து
இந்த கூட்டத்தில் நொய்யல் ஆற்றை மீட்க முதலில்மாவட்ட அளவில் அல்லது தாலுகா அளவில் அனைத்து தரப்பினரும் அடங்கிய ஒரு ஒற்றுமையான கூட்டமைப்பு ஏற்படுத்தப்படும். மேலும் நொய்யல் ஆற்றை மீட்க 10 லட்சம் பேரிடம் கையெழுத்து பெறும் இயக்கம் நடத்தப்படும். இதன்மூலம் மாணவ-மாணவிகள் இடையே விழிப்புணர்வை ஏற்படுத்தலாம். மேலும் புதிதாக ஏற்படுத்தப்படும் கூட்டமைப்பின் குறைந்தபட்ச செயல்திட்டம் குறித்து பேசி வருகிறோம்.
நொய்யல் ஆற்றை மீட்பது குறித்து அமைச்சர்கள், அரசு அதிகாரிகள், முதல்-அமைச்சர் உள்ளிட்டோரை சந்தித்து பேச உள்ளோம். இந்த கூட்டமைப்பில் தொழில்முனைவோர், விவசாயிகள், தன்னார்வலர்கள், பல்வேறு அமைப்பை சேர்ந்தவர்கள் உள்ளிட்டோர் இருப்பார்கள். அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் விருப்பப்பட்டால் இந்த கூட்டமைப்பில் இணையலாம்.இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது பசுமை தாயகம் அமைப்பின் செயலாளர் அருள் ரத்தினம், விவசாய அமைப்பை சேர்ந்த வேலு நாயக்கர் உள்பட பலர் இருந்தனர்.