10 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்
உக்கடத்தில் கேட்பாரற்று கிடந்த 10 மோட்டார் சைக்கிள்களை போக்குவரத்து போலீசார் பறிமுதல் செய்தனர்
உக்கடம்
கார் வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து கோவையில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. போலீசார் தீவிர ரோந்து சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவை கோட்டை மேட்டில் கார் வெடிப்பு நடந்த பகுதியை சுற்றி உள்ள உக்கடம், வின்சென்ட்ரோடு உள்ளிட்ட இடங்களில் சாலையோரம் நீண்ட நாட்களாக கேட்பாரற்று கிடந்த வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்து வருகின்றனர்.
கடந்த 2 தினங்களுக்கு முன்பு அந்த பகுதியில் கேட்பாரற்று நின்ற 12 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதில் 7 கார்களின் உரிமையாளர்கள் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து வாகனங்களை பெற்றுக்கொண்டனர். மற்ற 5 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
நேற்று உக்கடம், வின்சென்ட்ரோடு, கோட்டைமேடு ஆகிய பகுதிகளில் உரிய ஆவணங்கள் இல்லாமல் கேட்பாரற்று நின்ற 10 மோட்டார் சைக்கிள்களை போக்குவரத்து போலீசார் பறிமுதல் செய்து வேனில் ஏற்றி கொண்டு சென்றனர்.
மேலும் அந்த வாகனங்களின் உரிமையாளர்கள் யார்? என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.