ஆண்டிமடம் ஒன்றியத்தில் ரூ.78 கோடியில் 10 புதிய வளர்ச்சி திட்ட பணிகள்


ஆண்டிமடம் ஒன்றியத்தில் ரூ.78 கோடியில் 10 புதிய வளர்ச்சி திட்ட பணிகள்
x

ஆண்டிமடம் ஒன்றியத்தில் ரூ.78 கோடியில் 10 புதிய வளர்ச்சி திட்ட பணிகளை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்.

அரியலூர்

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை சார்பில் ரூ.78.03 கோடி மதிப்பீட்டில் 10 புதிய வளர்ச்சி திட்டப்பணிகளை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார். விழாவுக்கு மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தலைமை தாங்கினார். ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் முன்னிலை வகித்தார். இதையடுத்து, ஆண்டிமடம் ஒன்றியம், மருதூர் ஊராட்சியில் நெடுஞ்சாலைத்துறை- நபார்டு மற்றும் கிராம சாலைகள் அலகு சார்பில் ஊராட்சி ஒன்றிய சாலைகளை இதர மாவட்ட சாலைகளாக தரம் உயர்த்துதல் திட்டத்தின் கீழ் ரூ.3 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பீட்டில் மருதூர்- நாகல்குழி சாலை வரை தரம் உயர்த்துதல் பணியினை அமைச்சர் தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து, ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் முதல்-அமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின்கீழ் ரூ.34 லட்சத்து 67 ஆயிரம் மதிப்பீட்டில் 1 கி.மீ. நீளத்திற்கு மருதூர் தெற்குப்பட்டி சாலை அமைக்கும் பணியினையும், கொடுக்கூர் ஊராட்சியில் ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் முதல்-அமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.222.86 லட்சம் மதிப்பீட்டில் 2.63 கி.மீ. நீளத்திற்கு கொடுக்கூர்- பொன்பரப்பி சாலை அமைக்கும் பணியினையும், வல்லம் ஊராட்சியில் ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் முதல்-அமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.78.62 லட்சம் மதிப்பீட்டில் 1.85 கி.மீ. நீளத்திற்கு வல்லம் - அய்யூர் சாலை அமைக்கும் பணியினையும் தொடங்கி வைத்து பணிகளை தரமான கட்டுமான பொருட்களை கொண்டு விரைவில் முடித்திட சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

அதனைத்தொடர்ந்து, தெற்கு நத்தம் கிராமத்தில் ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் முதல்-அமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.137.21 லட்சம் மதிப்பீட்டில் 3.56 கி.மீ. நீளத்திற்கு குளத்தூர் - அய்யூர் சாலை அமைக்கும் பணி உள்பட ரூ.78.03 கோடி மதிப்பீட்டில் 10 புதிய வளர்ச்சி திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார். மேலும், இந்த பணிகளை தரமாகவும், விரைவாகவும் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அறிவுறுத்தினார்.


Next Story