விவசாய மோட்டார்கள், பாக்கு மரங்களை சேதப்படுத்திய 10 பேர் கைது


விவசாய மோட்டார்கள், பாக்கு மரங்களை சேதப்படுத்திய 10 பேர் கைது
x

ஜேடர்பாளையம் அருகே விவசாய மோட்டார்கள், பாக்கு மரங்களை சேதப்படுத்திய 10 பேரை போலீசார் கைது செய்தனர்.

நாமக்கல்

பரமத்திவேலூர்

பெண் படுகொலை

நாமக்கல் மாவட்டம் ஜேடர்பாளையம் அருகே வி.கரபாளையத்தில் கடந்த மார்ச் மாதம் 11-ந் தேதி ஆடு மேய்க்க சென்ற இளம்பெண் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக வெல்ல ஆலையில் வேலை செய்த 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து வடமாநில தொழிலாளர்களின் கொட்டகைகள், டிராக்டர்கள், குடிசைகள், பள்ளி பஸ் போன்றவற்றுக்கு தீ வைக்கப்பட்டன. மேலும் குளத்தில் விஷத்தை கலந்தது என அடுத்தடுத்த வன்முறை சம்பவங்கள் நடந்தன.

கடந்த மே மாதம் 13-ந் தேதி வடமாநில தொழிலாளர்கள் தங்கியிருந்த அறையை உடைத்த மர்மநபர்கள் தொழிலாளர்கள் மீது மண்எண்ணெய் பாட்டில்களை வீசி தீ வைத்தனர். இதில் ராஜேஷ் என்பவர் உயிரிழந்தார். இதையடுத்து அப்பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழை, பாக்கு மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டன. இதனால் ஜேடர்பாளையம் பகுதியில் பல்வேறு மாவட்டங்களில் ஏராளமான போலீசார் இரவு, பகலாக துப்பாக்கி ஏந்தி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

மரங்கள் வெட்டி சாய்ப்பு

மேலும் புதுப்பாளையம் பகுதியில் முருகேசன் என்பவருக்கு சொந்தமான தோப்பில் சுமார் 600-க்கும் மேற்பட்ட வாழை மற்றும் பாக்கு மரங்கள், பொத்தனூர் பகுதியை சேர்ந்த சவுந்தர்ராஜன் (வயது 55) என்பவருக்கு சொந்தமான சின்னமருதூர் பகுதியில் 3 ஆயிரம் பாக்கு மரங்கள், மரவள்ளிக்கிழங்கு செடிகள் மர்மநபர்கள் வெட்டி சாய்த்தனர்.

இந்தநிலையில் கடந்த 5-ந் தேதி இரவு ஜேடர்பாளையத்தை சேர்ந்த சுப்பிரமணி (42) என்பவரது தோட்டத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட டிராக்டருக்கு மர்ம நபர்கள் தீ வைத்தனர். மேலும் அதே பகுதியை சேர்ந்த பெரியசாமி (70) என்பவரது தோட்டத்தில் மரவள்ளிக்கிழங்கு செடிகள், அதே பகுதியைச் சேர்ந்த வீரமணி (42) என்பவருடைய வாழை மரங்களையும் மர்மநபர்கள் வெட்டி சாய்த்தனர்.

10 பேர் கைது

இந்த சம்பவங்கள் தொடர்பாக நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் தலைமையில் 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு மர்மநபர்களை வலைவீசி தேடி வந்தனர். இந்தநிலையில் ஜேடர்பாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த சிவராஜ் (44), பாலசுப்ரமணி (50), பழனிச்சாமி என்கிற மணி (55), விஜய் (25), பூபதி (46), சூர்யா (18), பிரகாஷ் (25), மெய்யழகன் (21), பரணிதரன் (19) மற்றும் தனுஷ் (20) ஆகிய 10 பேரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் அவர்களிடம் இருந்து 5 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 9 கத்திகளையும் பறிமுதல் செய்தனர். இது போன்ற சம்பவங்களில் ஈடுபட்டவர்களிடமிருந்து சேதப்படுத்தியதற்கான இழப்பினை பறிமுதல் செய்வதற்கு மாவட்ட கலெக்டர் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அதற்கு உடந்தையாக இருப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் அறிவித்துள்ளார்.


Next Story