கஞ்சா விற்ற கல்லூரி மாணவர் உள்பட 10 பேர் கைது


கஞ்சா விற்ற கல்லூரி மாணவர் உள்பட 10 பேர் கைது
x
தினத்தந்தி 7 May 2023 12:30 AM IST (Updated: 7 May 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon

கோவையில் கஞ்சா விற்பனை செய்த கல்லூரி மாணவர் உள்பட 10 பேரை கைது செய்து போலீசார் நடவடிக்கை எடுத்து உள்ளனர்.

கோயம்புத்தூர்

கோவை

கோவையில் கஞ்சா விற்பனை செய்த கல்லூரி மாணவர் உள்பட 10 பேரை கைது செய்து போலீசார் நடவடிக்கை எடுத்து உள்ளனர்.

போலீசார் சோதனை

கோவை மாநகர பகுதியில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை செய்வதை தடுக்க போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின்பேரில் போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். குறிப்பாக கல்லூரி மாணவர்களிடையே கஞ்சா பழக்கம் அதிகமாக இருப்பதால் கல்லூரிகள் அருகே போலீசார் தீவிரமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் கோவை மாநகர பகுதியில் பள்ளி மற்றும் கல்லூரி பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் தீவிர சோதனை நடத்தினார்கள்.

4 பேர் கைது

அதில் குனியமுத்தூர் பகுதியில் நடத்திய சோதனையில் 4 பேர் ஒரு பள்ளி அருகே நின்றிருந்தனர். உடனே போலீசார் அவர்களை பிடித்து விசாரணை நடத்தினார்கள். அதில் அவர்கள், அந்தப்பகுதியை சேர்ந்த மகேஷ்குமார் (வயது 19), சூர்யா (20), சூரிய பிரகாஷ் (23), சசிதரன் (23) என்பதும், கஞ்சா விற்பனை செய்து வருவதும் தெரியவந்தது.

தொடர்ந்து நடத்திய விசாரணையில் மகேஷ்குமார் ஒரு கல்லூரியில் எம்.இ. முதலாம் ஆண்டு படித்து வருவதும், மற்ற 3 பேரும் கஞ்சா வியாபாரிகள் என்பதும், இந்த 3 பேரிடம் இருந்து கஞ்சா வாங்கி, சக மாணவர்களுக்கு மகேஷ்குமார் கொடுத்து வருவதும் தெரியவந்தது.

இதையடுத்து 4 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 1¾ கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் மீது பல்வேறு வழக்குகள் இருப்பதால் தொடர்ந்து 4 பேரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் 6 பேர் சிக்கினர்

அதுபோன்று சரவணம்பட்டி, செல்வபுரம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த சசிதரன், மணிகண்டன், சுரேஷ், சுப்பிரமணியன், சங்கர், சரவணன், சூர்யபிரகாஷ் ஆகியோரை போலீசார் கைது செய்ததுடன் அவர்களிடம் இருந்து 1 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. மொத்தத்தில் கோவையில் ஒரே நாளில் கஞ்சா விற்ற 10 பேரை போலீசார் கைது செய்து இருப்பது குறிப்பிடத்தக்கது.


Next Story