சுவர் இடிந்து விழுந்து பெண் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 10 பேர் படுகாயம்

கோவை எஸ்.என்.எஸ். கல்லூரியில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் கடும் தள்ளு, முள்ளு ஏற்பட்டது. இதில் கல்லூரி சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் பெண் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 10-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். கல்லூரி நிர்வாகம் போதிய முன்னேற்பாடுகள் செய்யாததே விபத்திற்கு காரணம் என்று பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.
சரவணம்பட்டி
கோவை எஸ்.என்.எஸ். கல்லூரியில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் கடும் தள்ளு, முள்ளு ஏற்பட்டது. இதில் கல்லூரி சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் பெண் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 10-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். கல்லூரி நிர்வாகம் போதிய முன்னேற்பாடுகள் செய்யாததே விபத்திற்கு காரணம் என்று பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.
எஸ்.என்.எஸ். கலை, அறிவியல் கல்லூரி
கோவை சரவணம்பட்டி-துடியலூர் சாலையில் உள்ள எஸ்.என்.எஸ். ராஜலட்சுமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் இசை நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதையடுத்து சரவணம்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள ஏராளமான பொதுமக்கள் நிகழ்ச்சியை காண கல்லூரியில் நேற்று காலை முதல் குவிந்தனர்.
கூட்டம் காரணமாக முதலில் வந்த பலரும் அனுமதிக்கப்பட்டனர். நேரம் செல்ல செல்ல மதியம் 2 மணிக்கு மேல் வந்தவர்களை இசை நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு செல்ல கல்லூரி நிர்வாகத்தினர் அனுமதிக்கவில்லை கூறப்படுகிறது.
இதனால் ஏராளமான இளைஞர்கள் கல்லூரி நுழைவு வாயில் முன் திரண்டனர். நுழைவு வாயில் கேட் பூட்டப்பட்டிருந்த போதிலும் அவர்கள் உள்ளே செல்ல முயன்றனர்.
சுற்றுச்சுவர் இடிந்தது
அவர்களை அங்கிருந்த காவலாளிகள் தடுத்து நிறுத்தினர். இதனால் தள்ளு, முள்ளு ஏற்பட்டது. மேலும் இளைஞர்கள் கேட்டை திறந்து கொண்டு உள்ளே முண்டியடித்து கொண்டு சென்றனர்.
இதனால் கூட்ட நெரிசல் ஏற்பட்டதால் மூச்சு திணறல் ஏற்பட்டு பெண்கள், சிறுவர்கள் உள்ளிட்டோர் மயக்கமடைந்து கீழே விழுந்தனர். அவர்கள் மீது பொதுமக்கள் ஏறி சென்றதால் பலர் காயம் அடைந்தனர்.
இதையடுத்து காயமடைந்த 4 பேர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதன்பின்னர் மீண்டும் கல்லூரி கேட் மூடப்பட்டு பொதுமக்கள் அனுமதிக்கப்படாமல் வெளியே நிறுத்தப்பட்டனர். இதனால் ஆத்திரம் அடைந்த இளைஞர்கள் ஏராளமானோர் கல்லூரி சுற்றுச்சுவரில் ஏறி குதித்து உள்ளே செல்ல முயன்றனர்.
இதில் சுற்றுச்சுவர் இடிந்தது. இந்த இடிபாடிகளுக்குள் சிக்கி ஏராளமான இளைஞர்கள், பெண்கள் காயமடைந்தனர். இடிபாடுகளில் சிக்கி கொண்டவர்கள் மீது மற்றவர்கள் ஏறி சென்றனர்.
10 பேர் காயம்
இதனிடையே உள்ளே நுழைய முயன்றவர்களை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிலோமினா தடுத்து நிறுத்த முயன்றார். ஆனால் அவரும் அந்த கூட்டத்திற்குள் சிக்கி காயமடைந்தார்.
மேலும் விசுவாசபுரத்தை மாணவிகள் சேர்ந்த ஐஸ்வர்யா (வயது 18), நந்தினி (20), ஹரிணி (17), நல்லாம்பாளையத்தை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவி ஹரிசியா உள்பட 10 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இவ்வளவு களேபரங்கள் நடந்து கொண்டு இருந்த வேளையிலும், கல்லூரி நிர்வாகம் தொடர்ந்து இசை நிகழ்ச்சியை நடத்தி கொண்டு இருந்தது அங்கிருந்தவர்களை ஆத்திரம் அடைய செய்தது. கல்லூரி நிர்வாகத்தின் இத்தகைய அலட்சிய போக்கினை பல்வேறு சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
முன்னேற்பாடுகள் இல்லை
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-
இசை நிகழ்ச்சி குறித்து மாநகராட்சி உத்தரவை மீறி பல இடங்களில் பொது சுவர்களில் நோட்டீஸ் ஒட்டப்பட்டு பிரபலப்படுத்தப்பட்டது.
மேலும் ஏராளமான மக்கள் குவிந்த நிலையில் போதிய முன்னேற்பாடுகளை கல்லூரி நிர்வாகத்தினர் மேற்கொள்ள வில்லை. மேலும் அவசரத்திற்கு பயன்படுத்த ஆம்புலன்ஸ் வாகனமும் ஏற்பாடு செய்யப்படவிடவில்லை.
வாகன நிறுத்துமிடமும் செய்யப்படவில்லை. போலீஸ் பாதுகாப்பு கூடுதலாக கோரியிருக்கலாம். மேலும் நிகழ்ச்சி நடைபெற போலீஸ் மற்றும் தீயணைப்பு துறையினரிடம் முறையான அனுமதி பெற வில்லை என்று கூறப்படுகிறது.
இந்த அளவு கூட்டத்தை கூட்ட காவல்துறை எப்படி அனுமதி கொடுத்தது என்று தெரியவில்லை.
இவ்வாறு அவர்கள் கூறினர்.