பெண்கள் உள்பட 10 பேர் காயம்
பழனி அருகே சாலை தடுப்பில் சுற்றுலா பஸ் மோதி பெண்கள் உள்பட 10 பேர் காயம் அடைந்தனர்.
புதுச்சேரி சோலைநகர் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 38). இவர், தனது மகள் பிரஷியாவுக்கு (7) காதுகுத்தும் நிகழ்ச்சியை பழனி முருகன் கோவிலில் நடத்த முடிவு செய்தார். இதற்காக நேற்று மணிகண்டன் தனது மனைவி பாரதி (33), தாயார் கிருஷ்ணவேணி (55) மற்றும் உறவினர்களுடன் சுற்றுலா பஸ்சில் பழனிக்கு வந்து கொண்டிருந்தார். பஸ்சை கடலூரை சேர்ந்த புஷ்பராஜ் (25) என்பவர் ஓட்டினார்.
திண்டுக்கல்-பழனி சாலையில் கணக்கன்பட்டி மூகாம்பிகை கோவில் அருகே வந்தபோது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலை நடுவில் இருந்த தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி நொறுங்கியது.
இந்த விபத்தில் டிரைவர், பாரதி, பிரஷியா, கிருஷ்ணவேணி உள்பட 10 பேர் படுகாயம் அடைந்தனர். தகவலறிந்த ஆயக்குடி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக பழனி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.