அரசு பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து 10 பேர் காயம்
கொரடாச்சேரி அருகே அரசு பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து 10 பேர் காயம் அடைந்தனர். இதனால் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
கொரடாச்சேரி அருகே அரசு பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து 10 பேர் காயம் அடைந்தனர். இதனால் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
அரசு பஸ்
நாகையில் இருந்து திருச்சிக்கு நேற்று மதியம் அரசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பஸ் திருவாரூரை அடுத்த கொரடாச்சேரி அருகே வெள்ளமதகு பகுதியில் சாலையில் சென்று கொண்டிருந்தபோது எதிரே தஞ்சையில் இருந்து திருவாரூர் நோக்கி தனியார் பஸ் வந்துள்ளது. அந்த தனியார் பஸ்சின் பின்னாடி 2 சரக்கு வாகனங்கள் வந்துள்ளன.
அந்த சரக்கு வாகனங்கள் அந்த தனியார் பஸ்சை முந்தி செல்ல ஒன்றன் பின் ஒன்றாக வந்துள்ளன. அப்போது அந்த சரக்கு வாகனங்கள் மீது மோதாமல் இருக்க அரசு பஸ் டிரைவர் தான் ஓட்டி வந்த பஸ்சை சாலையோரத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.
சாலையோரத்தில் கவிழ்ந்தது
சாலையோரத்தில் சாலை விரிவாக்க பணிகளுக்காக மண் கொட்டப்பட்டுள்ளதால், அதில் எதிர்பாராத விதமாக சாலையோரத்தில் இருந்த பள்ளத்தில் அரசு பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 50-க்கும் மேற்பட்ட பயணிகள் அலறிதுடித்தனர்.
சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து கவிழ்ந்த பஸ்சில் இருந்து பயணிகளை மீட்டனர். இதில் 10 பேர் காயம் அடைந்தனர். அவர்களை ஆம்புலன்ஸ் மூலம் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
போக்குவரத்து பாதிப்பு
இதுகுறித்து தகவல் அறிந்த கொராடாச்சேரி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். தொடர்ந்து இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் திருவாரூர் போக்குவரத்து பணிமனையில் இருந்து மீட்பு வாகனம் வரவழைக்கப்பட்டு கவிழ்ந்த பஸ்சை மீட்டனர். இந்த விபத்தால் திருவாரூர்- தஞ்சை சாலையில் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.