4 பெண்களிடம் 10 பவுன் நகை பறிப்பு


4 பெண்களிடம் 10 பவுன் நகை பறிப்பு
x
தினத்தந்தி 3 July 2023 4:15 AM IST (Updated: 3 July 2023 4:15 AM IST)
t-max-icont-min-icon

வடவள்ளி, துடியலூரில் 4 பெண்களிடம் 10 பவுன் நகை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கோயம்புத்தூர்


வடவள்ளி

வடவள்ளி, துடியலூரில் 4 பெண்களிடம் 10 பவுன் நகை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

நகை பறிப்பு

கோவை வடவள்ளி அருகே ராஜமாதா நகரை சேர்ந்தவர் சத்யதேவ். இவருடைய மனைவி லட்சுமி பிரபா (வயது 36). சம்பவத்தன்று இவர் தனது குழந்தையுடன் மொபட்டில் சென்று கொண்டு இருந்தார். அப்போது எதிரே மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் வந்தனர். அவர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் லட்சுமி பிரபா கழுத்தில் அணிந்து இருந்த 1½ பவுன் தங்க சங்கிலியை பறித்து விட்டு தப்பி சென்றனர்.

சுண்டப்பாளையம் விநாயகர் கோவில் வீதியை சேர்ந்தவர் கார்த்திக். இவருடைய மனைவி உமாதேவி (27). சம்பவத்தன்று இவர் தனது மொபட்டில் 2 குழந்தைகளை ஏற்றிக்கொண்டு கெம்பனூரில் உள்ள தோழி வீட்டிற்கு சென்று கொண்டு இருந்தார். அப்போது பின் தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் திடீரென்று உமாதேவி கழுத்தில் அணிந்து இருந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்து விட்டு தப்பிச் சென்றனர். இது குறித்த புகார்களின் பேரில் வடவள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

துடியலூர்

சோமையனூர் அருகே உள்ள திருவள்ளூவர் நகரை சேர்ந்த இளங்கோவன் என்பவரின் மனைவி மேகலா (50). சம்பவத்தன்று இவர் அந்த பகுதியில் உள்ள கம்பெனிக்கு வேலைக்கு சென்றார். வேலை முடிந்ததும் பஸ் ஏறுவதற்காக பஸ் நிறுத்தத்துக்கு நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் மேகலா கழுத்தில் கடந்த 3½ பவுன் தங்க செயினை பறித்து தப்பிச் சென்றனர்.

இதேபோல குப்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரின் மகள் கீர்த்தனா (24). சம்பவத்தன்று இவர் கே.என்.ஜி.புதூர் அருகே வீட்டிற்கு நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிள் வந்த மர்மநபர்கள் கீர்த்தனா அணிந்திருந்த 1 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்றனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்கள் கொடுத்த புகாரின் பேரில் துடியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



Next Story