வீட்டில் தூங்கி கொண்டு இருந்தலாரி பட்டறை அதிபர் மனைவியிடம் 10 பவுன் நகை பறிப்பு


வீட்டில் தூங்கி கொண்டு இருந்தலாரி பட்டறை அதிபர் மனைவியிடம் 10 பவுன் நகை பறிப்பு
x

நாமக்கல்லில் வீட்டில் தூங்கி கொண்டு இருந்த லாரி பட்டறை அதிபர் மனைவியிடம் 10 பவுன் நகைகளை பறித்து சென்ற மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

நாமக்கல்

லாரி பட்டறை அதிபர்

நாமக்கல் முதலைப்பட்டிபுதூரை சேர்ந்தவர் பிரபு (வயது26). லாரி பட்டறை நடத்தி வருகிறார். இவரது மனைவி புனிதா (23). இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் வீட்டில் தூங்கி கொண்டு இருந்தனர். நள்ளிரவு 12 மணி அளவில் பிரபு வீட்டின் கதவை திறந்து சிறுநீர் கழிக்க வீட்டிற்கு அருகே உள்ள கழிவறைக்கு சென்று உள்ளார்.

அப்போது அங்கு பதுங்கி இருந்த மர்ம நபர் கழிவறையின் கதவை வெளிப்புறமாக தாழ்போட்டு விட்டு வீட்டிற்குள் நுழைந்து அங்கு தூங்கி கொண்டு இருந்த புனிதா கழுத்தில் அணிந்து இருந்த 10 பவுன் நகைகளை பறித்தார்.

மர்ம நபருக்கு வலைவீச்சு

தூக்கத்தில் திடீரென திடுக்கிட்டு எழுந்த புனிதா திருடன், திருடன் என கூச்சல் போட்டார். ஆனால் அதற்குள் அந்த நபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். மனைவியின் அலறல் சத்தம் கேட்டு கழிவறை கதவை உடைத்து கொண்டு வெளியே வந்த பிரபு அக்கம்பக்கத்தில் தேடி பார்த்தார். இருப்பினும் மர்ம நபர் சிக்கவில்லை.

இது குறித்து பிரபு நாமக்கல் நல்லிபாளையம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் புனிதாவிடம் நகைகளை பறித்து சென்ற மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் நேற்று அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story