அரியலூரில் செல்லாக்காசான 10 ரூபாய் நாணயங்கள்


அரியலூரில் செல்லாக்காசான 10 ரூபாய் நாணயங்கள்
x

அரியலூரில் செல்லாக்காசான 10 ரூபாய் நாணயங்கள் குறித்த விவரம் வருமாறு:-

அரியலூர்

500, 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை விட 10 ரூபாய் நோட்டுகள் அதிகமாக மக்களின் கைகளை கடந்து செல்கிறது. இதனால் 10 ரூபாய் நோட்டுகள் கிழியும் நிலையில், அழுக்குகள் நிறைந்து காணப்படும். எனவே 10 ரூபாய் நோட்டுகளுக்கு பதில் 10 ரூபாய் நாணயங்களை இந்திய ரிசர்வ் வங்கி கடந்த 2017-ம் ஆண்டு அறிமுகப்படுத்தியது.

செல்லாது என்று வதந்தி

இந்த நாணயங்கள் முதலில் மக்கள் கைகளுக்கு புழக்கத்துக்கு வந்தபோது வியப்புடன் பார்த்தனர். மக்கள் பலர் ஆர்வமுடன் வாங்கி பரிவர்த்தனை செய்தனர். தமிழகத்தில் அரியலூர் உள்பட சில மாவட்டங்களில் 10 ரூபாய் நாணயங்கள் அனைத்தும் செல்லாது என்ற வதந்தி மக்களிடையே காட்டுத்தீப்போல் பரவியது. பொதுவாக ஒரு வதந்தி என்பது சில நாட்கள் வரை இருக்கும். ஆனால் அரியலூர் மாவட்டத்தில் 10 ரூபாய் நாணய விவகாரம் பொறுத்தவரையில் மக்களிடையே நீண்ட நாட்களாக தீர்க்கப்படாத பிரச்சினையாகவே உள்ளது.

10 ரூபாய் நாணயங்கள் செல்லத்தக்கது என்று ரிசர்வ் வங்கி பலமுறை அறிவித்துள்ளது. ஆனாலும் 10 ரூபாய் நாணயங்களை வாங்க பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் தயக்கம் காட்டி வருகிறார்கள். 10 ரூபாய் நாணயங்களை யாரேனும் வாங்க மறுத்தாலோ, செல்லாது என்றாலோ அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும். அதாவது, இந்திய அரசினால் அங்கீகரிக்கப்பட்ட 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுப்பவர்கள் மீது புகார் அளித்தால், இந்திய தண்டனை சட்டம் 124 பிரிவு ஏ-வின் படி குற்றம். எனவே, இந்த குற்றத்திற்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

பஸ் பயணிகள் தகராறு

அரியலூர் மாவட்டத்துக்கு வெளி மாவட்டங்களை சேர்ந்த மக்கள் 10 ரூபாய் நாணயத்தை வியாபாரிகளிடம் கொடுத்தால் அதனை அவர்கள் வாங்குவதில்லை. பஸ்களில் கூட இந்த நிலை தான் நீடிக்கிறது. சில்லறையாக கொடுங்கள் என்று பஸ் கண்டக்டர்கள் கூறுவார்கள். ஆனால் 10 ரூபாய் நாணயத்தை கொடுத்தால் அதை வாங்குவதில்லை. ரூபாய் நோட்டாக வழங்குங்கள் என்கின்றனர்.

இதனால் வெளியூர் பயணிகளுக்கும், பஸ் கண்டக்டர்களுக்கும் இடையே அவ்வப்போது தகராறு ஏற்படுகிறது. இதனால் 10 ரூபாய் நாணயங்களை கொண்டு வரும் வெளி மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் அதனை மாற்ற முடியாமல் தங்களது ஊர்களுக்கு கொண்டு செல்கின்றனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

தென் மாவட்டங்களில்...

வேப்பூரை சேர்ந்த செல்லமுத்து:- சென்னை, பெங்களூரு போன்ற நகரங்களிலும், தென் மாவட்டங்களிலும் 10 ரூபாய் நாணயங்களை கடைக்காரர்கள், ஆட்டோக்காரர்கள் உள்பட அனைவரும் வாங்குகிறார்கள். ஆனால் பெரம்பலூர் மாவட்டத்தில் 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுக்கின்றனர். 10 ரூபாய் நாணயங்கள் செல்லாது என்று வதந்தி பரவியதால் டீக்கடைகள், மளிகைக்கடைகள், ஆட்டோக்கள், பஸ்களில் இந்த நாணயங்களை வாங்க மறுத்து விட்டனர். அதேபோன்று பொதுமக்களிடம் யாராவது இதனை கொடுத்தாலும் 10 ரூபாய் நாணயங்களை யாரும் வாங்குவதில்லை. இதனை தவிர்க்க அரசு, தனியார் வங்கிகள் மற்றும் மாவட்ட நிர்வாகம் உரிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

வாடிக்கையாளர்கள் வாங்க மறுப்பு

மருந்து கடை ஊழியர் கோகிலா:- எங்களிடம் மருந்து வாங்க வரும் வாடிக்கையாளரிடம் இருந்து 10 ரூபாய் நாணயங்களை பெற்றுக்கொள்கிறோம். அதே நேரத்தில் நாங்கள் பெற்ற 10 ரூபாய் நாணயங்களை வேறு வாடிக்கையாளரிடம் கொடுக்கும்போது, அவர்கள் அதை பெற்றுக்கொள்ள முன்வரவில்லை. உதாரணத்திற்கு யாரிடம் வாங்கினோமோ? அதே நபர்கள் மீண்டும் கடைக்கு வந்து மருந்து வாங்கியபோது மீதி தொகையில் 10 ரூபாய் நாணயங்களை அளித்தால், அவர்கள் பெற்றுக் கொள்வதில்லை. இதனால் மருந்து விற்பனை பிரதிநிதிகளிடம் அந்த நாணயங்களை கொடுக்கிறோம்.

கொடுத்தவர்களே வாங்குவதில்லை

எலக்ட்ரிக்கல் கடை வைத்திருக்கும் ராஜசேகர்:- பொதுமக்கள் 10 ரூபாய் நாணயங்களை பெற்றுக்கொள்ள மறுத்து விடுகின்றனர். மேலும் இந்த நாணயங்கள் எல்லாம் செல்லாது என்று கூறுகின்றனர். என்னிடம் அதிகளவில் நாணயங்கள் உள்ளன. கடைக்காரர்களை பொறுத்த அளவில் நாணயங்களை விட பணமாக இருந்தால் எளிதாக வங்கிகளில் ெசலுத்த முடியும்.

அரசு பஸ் கண்டக்டர் குப்புசாமி:- பஸ் பயணத்தின்போது என்னிடம் பயணிகள் அளிக்கும் 10 ரூபாய் நாணயங்களை பெற்றுக்கொள்கிறேன். அவற்றை பணிமனையில் கணக்கு ஒப்படைக்கும்போது அளித்து விடுகிறேன். ஆனால் என்னிடமிருந்து 10 ரூபாய் நாணயங்களை பயணிகள் வாங்கிக் கொள்ள மறுக்கின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

ரூ.3 லட்சத்துக்கு மேல் தேக்கம்:

பொதுமக்கள் வாங்கினால்தான் 10 ரூபாய் நாணயங்கள் புழக்கத்தில் இருக்கும்-வங்கி அதிகாரிகள் தகவல்

அரியலூர் பகுதியை சேர்ந்த வங்கி அதிகாரி ராஜ்குமார் கூறுகையில், இந்திய ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்திய 10 ரூபாய் நாணயங்கள் செல்லத்தக்கவை.எங்களிடமே சுமார் ரூ.3 லட்சம் அளவுக்கு 10 ரூபாய் நாணயங்கள் உள்ளன. பொதுமக்கள் அவற்றை வாங்க மறுக்கின்றனர். ஆனால் எங்களிடம் வாடிக்கையாளர்கள் அளிக்கும் 10 ரூபாய் நாணயங்களை பெற்றுக் கொள்கிறோம். 10 ரூபாய் நாணயங்கள் குறித்து எங்களது வங்கியில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். பொதுமக்கள் வாங்கினால் தான் மாவட்டத்தில் 10 ரூபாய் நாணயங்கள் புழக்கத்தில் இருக்கும் என்றார்.


Next Story