வாலிபருக்கு 10 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும்


வாலிபருக்கு 10 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும்
x

ஒரு ரூபாய் கூடுதலாக வசூலித்ததால் வாலிபருக்கு 10 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று தனியார் பஸ் நிறுவனத்துக்கு கோவை நுகர்வோர் கோர்ட்டு உத்தரவிட்டது

கோயம்புத்தூர்

கோவை

ஒரு ரூபாய் கூடுதலாக வசூலித்ததால் வாலிபருக்கு ரூ.10 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று தனியார் பஸ் நிறுவனத்துக்கு கோவை நுகர்வோர் கோர்ட்டு உத்தரவிட்டது.

தனியார் பஸ்சில் சென்றார்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்தவர் சின்ராஜ் (வயது 26). இவர் தனது சொந்த வேலை காரணமாக கோவை வந்தார். அவர் கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 20-ந் தேதி கோவை ரெயில் நிலையத்தில் இருந்து சிங்காநல்லூருக்கு செல்ல மேனகா டிரான்ஸ்போர்ட் என்ற தனியார் பஸ்சில் ஏறினார்.

அப்போது அந்த பஸ்சில் ரூ.5 டிக்கெட் கட்டணமாக வசூலிக்கப்பட்டது. அதற்கு சின்ராஜ், மற்ற பஸ்களில் ரூ.4 தானே கட்டணம், நீங்கள் ஏன் கூடுதலாக ஒரு ரூபாய் வசூலிக்கிறீர்கள் என்று கேட்டு உள்ளார். அதற்கு அந்த பஸ் கண்டக்டர், டிக்கெட் விலையை உயர்த்தி விட்டோம். ரூ.5 தான் கட்டணமாக வசூலிக்கிறோம் என்று கூறி உள்ளனர்.

கூடுதல் கட்டணம்

இதையடுத்து அவர் கடந்த 2015-ம் ஆண்டு ஜனவரி மாதம் 24-ந் தேதி அதே பஸ்சில் சிங்காநல்லூரில் இருந்து கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து சென்றார். அப்போதும் ரூ.4-க்கு பதிலாக ரூ.5 கட்டணம் வசூலித்து உள்ளனர்.

உடனே அவர் இது குறித்து அந்த தனியார் பஸ் நிறுவனத்துக்கு கடிதம் எழுதி, தன்னிடம் வசூலித்த கூடுதல் கட்டணத்தை திரும்ப செலுத்துவதுடன், கூடுதல் கட்டணம் வசூலித்ததற்கான காரணத்தை தெரிவிக்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார்.

ஆனால் அந்த நிறுவனம் சார்பில் எவ்வித பதிலும் தெரிவிக்க வில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் மனஉளைச்சலுக்கு ஆளான சின்ராஜ் கோவை மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

ரூ.10 ஆயிரம் இழப்பீடு

அதில், தன்னிடம் இருந்து 3 முறை கூடுதலாக வசூலித்த கட்ட ணம் ரூ.3 மற்றும் மனஉளைச்சலுக்காக ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதி தங்கவேல், தனியார் பஸ் கண்டக்டர் சேவை குறைபாடு செய்து இருப்பது உறுதியானதால் சின்ராஜிக்கு இழப்பீடாக ரூ.10 ஆயிரம், அவரிடம் இருந்து வசூலித்த டிக்கெட் கட்டணம் ரூ.3 மற்றும் வழக்கு செலவு ரூ.3 ஆயிரம் ஆகியவற்றை 2 மாதத்துக்குள் வழங்க வேண்டும் என்று தீர்ப்பு கூறினார்.


Next Story