போக்குவரத்து விதிமீறிய 10 வாகனங்கள் பறிமுதல்
பொள்ளாச்சி, ஆனைமலையில் போக்குவரத்து விதிமீறிய 10 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
பொள்ளாச்சி
பொள்ளாச்சி, ஆனைமலையில் போக்குவரத்து விதிமீறிய 10 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
வாகன தணிக்கை
பொள்ளாச்சி, ஆனைமலை, கிணத்துக்கடவு பகுதிகளில் உரிய அனுமதி இல்லாமல் கனிமவளங்கள் கடத்தப்படுவதாகவும், அதிக பாரம் ஏற்றி செல்வதாகவும் புகார் எழுந்தது. இதைத்தொடர்ந்து வட்டார போக்குவரத்து அலுவலர் முருகானந்தம் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் கோகுலகிருஷ்ணன், செல்வி ஆகியோர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
ஆனைமலை, வடக்கிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் குழுக்களாக பிரிந்து சென்று சோதனை நடத்தப்பட்டது. அப்போது தகுதி சான்று, உரிமம் இல்லாமல் மற்றும் அதிக பாரம் ஏற்றி சென்றது தெரியவந்தது. இதை தொடர்ந்து போக்குவரத்து விதிமுறையை மீறியதாக லாரிகள் உள்பட 10 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுகுறித்து வட்டார போக்குவரத்து அதிகாரிகள் கூறியதாவது:-
அபராதம் வசூல்
வடக்கிபாளையம் அருகே மலுமிச்சம்பட்டியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்துக்கு கேரளாவில் இருந்து தொழிலாளர்களை வேலைக்கு அழைத்து சென்ற 4 வாகனங்கள் சோதனை செய்யப்பட்டது. அந்த வாகனங்களில் அதிகமாக ஆட்களை ஏற்றி சென்றதோடு, உரிய அனுமதி இல்லாமல் இயங்கியது தெரியவந்தது.
மேலும் 4 லாரிகள் தகுதி சான்று, உரிமம் இல்லாதது, அதிக பாரம் ஏற்றி சென்றது தெரியவந்தது. போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக லாரிகள் உள்பட 10 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் மூலம் அபராதம், வரி மூலம் ரூ.2 லட்சத்து 44 ஆயிரத்து 500 வசூல் செய்யப்பட்டது. இதை போன்று தொடர்ந்து முக்கிய சாலைகளில் வாகன சோதனை நடத்தப்பட்டு விதிமுறைகளை மீறி கனிம வளங்களை கடத்தி செல்லும் லாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.