எடப்பாடி பெரிய ஏரி நிரம்பி 2 மாதங்களாக வழிந்தோடும் தண்ணீர்: ஏரியை கடக்க வழியின்றி பரிதவிக்கும் 10 கிராம மக்கள் ஆபத்தான உபரிநீர் பாதையால் படிப்பை பாதியில் நிறுத்தும் மாணவர்கள்
எடப்பாடி பெரிய ஏரி கடந்த 2 மாதங்களுக்கு முன்பு நிரம்பி தற்போது வரை உபரிநீர் வழிந்தோடுகிறது. இதனால் ஏரியை கடக்க வழியின்றி 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பரிதவித்து வருகின்றனர். ஆபத்தான உபரிநீர் பாதையால் இந்த கிராமங்களை சேர்ந்த மாணவர்கள் பலர் படிப்பை பாதியில் நிறுத்தும் சூழல் ஏற்பட்டு உள்ளது.
எடப்பாடி,
பெரிய ஏரி
எடப்பாடி நகரின் தெற்கு எல்லை பகுதியையும், சங்ககிரி தொகுதிக்கு உட்பட்ட தேவண்ணக்கவுண்டனூர் பகுதியையும் இணைக்கும் மையப்புள்ளியாக எடப்பாடி பெரிய ஏரி அமைந்துள்ளது. சுமார் 200 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரியின் மறு கரையில் தேவண்ணக்கவுண்டனூர் ஊராட்சிக்கு உட்பட்ட செட்டிக்காடு, சரிபாறைக்காடு, புட்டமனை, சின்ன பொரப்பான் பள்ளம், நண்டுக்காரன் காடு, புளியங்காடு, வெள்ளூற்று உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் சுமார் 600-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இங்குள்ள கிராமங்களை அடுத்து வனப்பகுதி அமைந்திருப்பதால், கிராம மக்கள் அனைவரும் தங்கள் அன்றாட தேவைகளுக்காக, எடப்பாடி நகருக்கு வந்து செல்கின்றனர். குறிப்பாக இப்பகுதியில் இருந்து சுமார் 300-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் பெரிய ஏரிக்கரை மற்றும் உபரிநீர் செல்லும் சிமெண்டு கரை வழியாக தான் எடப்பாடிக்கு ெசன்று அங்குள்ள அரசு பள்ளியில் படித்து வருகின்றனர். இதேபோல் கல்லூரி மாணவ, மாணவிகளும் எடப்பாடி மற்றும் பல்வேறு நகரங்களுக்கு இந்த பாதையில் சென்று வருகின்றனர்.
பஸ் வசதி இல்லை
மேலும் இங்குள்ள கிராமங்களுக்கு எந்த ஒரு பஸ் வசதியும் இல்லாத நிலையில் பொதுமக்கள் மோட்டார் சைக்கிள் மூலமாகவோ அல்லது நடந்து சென்றோ தான் எடப்பாடி நகரை அடைய வேண்டிய நிலை உள்ளது. இந்த ஏரி கடந்த காலங்களில் நிரம்பிய போது அதிகபட்சமாக ஒரு வாரம் என்ற அளவில் உபரிநீர் வெளியேறும் சூழல் இருந்ததால் இந்த கிராமங்களை சேர்ந்த மக்கள் இதுவரை பெரிய அளவில் பாதிப்பை சந்திக்கவில்லை.
இந்த நிலையில் இந்த ஆண்டு சேலம் மாவட்டத்தில் வழக்கத்திற்கு மாறாக கூடுதல் மழை பெய்தது. குறிப்பாக சமீபத்தில் பெய்த கனமழையால் எடப்பாடி பெரிய ஏரி கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தனது முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிய தொடங்கியது.
2 மாதங்களாக வழிந்தோடுகிறது
கனமழை நீடித்து வரும் நிலையில், பெரிய ஏரிக்கு சரபங்கா நதியின் உபரிநீர் தொடர்ந்து வருகிறது. இதனால் இந்த ஏரியில் இருந்து அதிகப்படியான உபரிநீர் மறுகால் எனப்படும் சுமார் ஒரு கிலோமீட்டர் நீளமுள்ள சிமெண்டு கரையின் வழியாக ததும்பி வழிந்தோடுகிறது. கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக தண்ணீர் நிரம்பி வழிந்தோடுகிறது.
குறிப்பாக உபரிநீர் தொடர்ந்து வழிந்தோடும் நிலையில் அதிகப்படியான இடங்களில் பாசி படிந்திருப்பதால், தினசரி இப்பகுதியில் பலர் ஏரியை கடக்கும் போது, வழுக்கி விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். இப்பகுதியில் வேறு மாற்று பாதை வசதிகள் இல்லாத நிலையில், கிராம மக்கள் மிகுந்த சிரமத்துடனே இந்த அவல நிலையை நாள்தோறும் எதிர்கொண்டு வருகின்றனர்.
இதனால் இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வாக ஏரியில் உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மாணவி கருத்து
இதுகுறித்து அந்த பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவி தமயந்தி கூறும் போது,'நான் எடப்பாடி அரசு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறேன். கடந்த 2 மாதங்களாக எடப்பாடி ஏரிக்கரையில் தொடர்ந்து தண்ணீர் பாய்ந்து வருகிறது. நானும் என்னுடன் படிக்கும் சக மாணவிகளும் நாள்தோறும் அபாயகரமான இந்த நீர்ப்பாதையை கடந்து பள்ளிக்கு சென்று வருகிறோம். குறிப்பாக மழைக்காலங்களில் மேலும் அதிகமான சிரமத்திற்கு உள்ளாவதுடன் சில நேரம் தண்ணீரில் வழுக்கி விழுந்து விடுவதால் மிகுந்த பயத்துடனே இந்த பகுதியை கடந்து பள்ளிக்கு சென்று வருகிறோம். ஏரி நீரை கடந்து செல்வது ஒரு பெரிய சுமையாகவே எங்களுக்கு தொடர்ந்து வருகிறது' என்றார்.
விவசாயி
இந்த பகுதியை சேர்ந்த விவசாயி ராம்குமார் கூறும்போது, 'எடப்பாடி பெரிய ஏரியின் மறுகரையில் உள்ள 10-க்கும் மேற்பட்ட கிராம பகுதியை சேர்ந்த விவசாயிகள், தாங்கள் விளைவித்த பொருட்களை சந்தைப்படுத்தவும், விவசாய பயன்பாட்டுக்கு தேவையான உரம், விதை, பூச்சி மருந்து உள்ளிட்ட பல்வேறு பொருட்களை வாங்கி வரவும் இந்த ஏரியில் உபரிநீர் செல்லும் பாதை வழியாக தான் நாள்தோறும் எடப்பாடிக்கு சென்று வருகிறோம். குறிப்பாக வயதான பலர் எடப்பாடி பெரிய ஏரிக்கரை பகுதியில் பாய்ந்து ஓடும் உபரிநீரை கடக்க முடியாமல், மிகுந்த சிரமப்படுவது இப்பகுதியில் வாடிக்கையான நிகழ்வாக அமைந்துள்ளது. இப்பகுதி மக்களின் அவலநிலையை தீர்க்கும் வகையில் இப்பகுதியில் உயர்மட்ட பாலத்துடன் கூடிய சாலை அமைத்து தரக்கோரி பலமுறை அரசுக்கு கோரிக்கை விடுத்தும் இன்றுவரை எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை' என்றார்.
படிப்பை பாதியில் நிறுத்தும்...
அதே பகுதியை சேர்ந்த சுந்தரராஜன் கூறும் போது, 'எடப்பாடி பெரிய ஏரியின் மறு கரையில் உள்ள கிராம மக்கள் அனைவரும், தங்களின் ஏதாவது ஒரு அத்தியாவசிய தேவைக்காக தினசரி எடப்பாடி நகருக்கு வந்து செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. இதில் ஏரிக்கரையை கடந்து உபரிநீர் செல்லும் ஒரு கிலோமீட்டர் நீள சிமெண்டு பாதையில் ஒருபுறம் சுமார் 30 அடி ஆழ பள்ளத்தாக்கும், மறுபுறம் மிக ஆழமான நீர்த்தேக்கத்திற்கும் இடையில் உள்ள, பாசி படர்ந்த நீரோட்டத்தின் நடுவே ஏரிக்கரையை கடந்து எடப்பாடி நகருக்கு வந்து செல்வது என்பது அனைவருக்கும் சாத்தியமான விஷயம் அல்ல. குறிப்பாக இரவு நேரங்களில் இந்த சாலையை கடந்து செல்வோரின் நிலை மிகவும் ஆபத்தானதாக உள்ளது, பல நேரங்களில் இந்த நீரோட்டத்திற்கு பயந்து இப்பகுதியில் இருந்து மாணவர்கள் பள்ளிக்கு சென்று வருவது தடைபடுகிறது. சில மாணவர்கள் படிப்பை பாதியில் நிறுத்திய சம்பவங்களும் இப்பகுதியில் தொடர் நிகழ்வாகி வரும் நிலையில், இதற்கான நிரந்தர தீர்வை அரசு உருவாக்கி தர வேண்டும்' என்றார்.
செட்டிகாடு பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் பணிபுரியும் தமிழ்ச்செல்வி கூறும் போது,'நான் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக எடப்பாடி பெரிய ஏரியின் மறு கரையில் உள்ள செட்டிக்காடு அங்கன்வாடி மையத்தில் பணிபுரிந்து வருகிறேன். ஒவ்வொரு நாளும் இந்த நீர்நிலையை கடந்து மறுகரையில் உள்ள அங்கன்வாடி மையத்திற்கு சென்று திரும்புவது ஒரு பெரிய சவாலான நிகழ்வாகவே அமைந்துள்ளது. குறிப்பாக இப்பகுதியில் உள்ள கர்ப்பிணிகள், நோயாளிகள், வயதான முதியவர்கள் இந்த நீண்ட நீரோட்டத்தை கடந்து மறுகரையில் உள்ள மருத்துவமனைக்கு சென்று வருவது மிக சிரமமாகும். இந்த கிராம மக்களின் அடிப்படை தேவையான பாதுகாப்பான பாதை வசதியை அரசு விரைவில் உருவாக்கி தர வேண்டும்' என்றார்.