தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை
மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து புதுக்கோட்டை மகிளா கோர்ட்டு தீர்ப்பளித்தது.
பாலியல் வன்கொடுமை
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை பகுதியை சேர்ந்தவர் மணிவேல் (வயது 40). கூலித்தொழிலாளியான இவர், 28 வயதான மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தார். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்ணின் தரப்பில் கீரனூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் கடந்த 2018-ம் ஆண்டு ஜனவரி மாதம் புகார் அளிக்கப்பட்டது.
அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிவேலை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு புதுக்கோட்டை மகிளா கோர்ட்டில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சத்யா இன்று தீர்ப்பு வழங்கினார்.
சிறை தண்டனை
மனநலம் பாதித்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த மணிவேலுவுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தும், ரூ.1½ லட்சம் அபராதம் விதித்தும் நீதிபதி தீர்ப்பளித்தார். அபராத தொகையை பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நிவாரணமாக வழங்க உத்தரவிட்டார். இதையடுத்து அவரை திருச்சி மத்திய சிறையில் அடைக்க போலீசார் பலத்த பாதுகாப்புடன் அழைத்து சென்றனர். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் யோக மலர் ஆஜராகி வாதாடினார்.