2 பேருக்கு தலா 10 ஆண்டு சிறை
ஈமு கோழி பண்ணை நடத்தி ரூ.2½ கோடி மோசடி வழக்கில் மறு விசாரணை நடத்தி உரிமையாளர்கள் 2 பேருக்கு தலா 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோவை கோர்ட்டு தீர்ப்பளித்தது.
ஈமு கோழி பண்ணை நடத்தி ரூ.2½ கோடி மோசடி வழக்கில் மறு விசாரணை நடத்தி உரிமையாளர்கள் 2 பேருக்கு தலா 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோவை கோர்ட்டு தீர்ப்பளித்தது.
ஈமு பண்ணை நடத்தி மோசடி
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே பட்டக்காரன்பாளையத்தில் ஆர்.கே. ஈமு கோழி பண்ணை என்ற நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனத்தின் உரிமையாளர்களாக கண்ணுசாமி (வயது 50) மற்றும் மோகனசுந்தரம் (50) ஆகியோர் இருந்தனர்.
இங்கு ஈமு கோழி வளர்ப்பு திட்டத்தில் அதிக வட்டி தருவதாக தெரிவித்தனர். இதில் மொத்தம் 110 முதலீட்டாளர்களிடம் ரூ.2.40 கோடி நிதி மோசடி செய்யப்பட்டது.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட ஒருவர் அளித்த புகாரின்பேரில் ஈரோடு மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை கோவையில் உள்ள தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நல பாதுகாப்பு சிறப்பு கோர்ட்டில் (டான்பிட்) நடைபெற்று வந்தது.
தலா 10 ஆண்டு சிறை
இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட கண்ணுசாமி மற்றும் மோகனசுந்தரம் ஆகியோருக்கு கடந்த 2021-ம் ஆண்டில் 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.1.21 கோடி அபராதமும் விதித்து டான்பிட் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
மேலும் அப்போது 2 பேரும் கோர்ட்டில் ஆஜராகாததால் அவர்களுக்கு பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டது.
இதற்கிடையே இருதரப்பு வாதத்தை விசாரிக்காமல் தீர்ப்பு வழங்கப்பட்டதாக கூறி மறு விசாரணை நடத்த வேண்டும் என கண்ணுசாமி மற்றும் மோகனசுந்தரம் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதையடுத்து இந்த வழக்கில் மறு விசாரணை நடத்தி தீர்ப்பு வழங்குமாறு டான்பிட் கோர்ட்டுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து இந்த வழக்கில் மறு விசாரணை நிறைவடைந்ததையடுத்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.
அதில் குற்றம் சாட்டப்பட்ட கண்ணுசாமி மற்றும் மோகனசுந்தரம் ஆகியோருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.2.42 கோடி அபராதம் விதித்து நீதிபதி ரவி தீர்ப்பளித்தார். இந்த முறையும் 2 பேரும் கோர்ட்டில் ஆஜராகாததால் பிடிவாரண்டு பிடிக்கப்பட்டு உள்ளது.








