தறிபட்டறை தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை
கோவை அருகே 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தறிபட்டறை தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோவை போக்சோ கோர்ட்டு தீர்ப்பளித்தது.
கோவை
கோவை அருகே 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தறிபட்டறை தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோவை போக்சோ கோர்ட்டு தீர்ப்பளித்தது.
பாலியல் தொல்லை
கோவையை அடுத்த கருமத்தம்பட்டி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 59), தறிபட்டறை தொழிலாளி. இவர் கடந்த 2018-ம் ஆண்டு ஜூலை மாதம் விளையாடிக்கொண்டு இருந்த 8 வயதான சிறுமியை சாக்லேட் வாங்கி தருவதாக தனது அறைக்கு அழைத்துச்சென்றார்.
பின்னர் அவர் அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து உள்ளார். இதனால் அந்த சிறுமி அழுதுகொண்டே அந்த அறையை விட்டு வெளியே வந்தார். இதைபார்த்த சிறுமியின் பெற்றோர் ஏன் அழுகிறாய் என்று கேட்டபோது, நடந்ததை கூறி அழுதார்.
போக்சோவில் கைது
இதை கேட்டதும் அதிர்ச்சி அடைந்த அந்த சிறுமியின் பெற்றோர் இது குறித்து கருமத்தம்பட்டி போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து செல்வராஜை கைது செய்தனர்.
பின்னர் இது தொடர்பான வழக்கு கோவையில் உள்ள போக்சோ சிறப்பு கோர்ட்டில் நடந்து வந்தது. இதில் அரசு தரப்பில் வக்கீல் ரஷீதா பேகம் ஆஜராகி வாதாடினார். வழக்கு விசாரணை முடிந்ததை தொடர்ந்து தீர்ப்பு கூறப்பட்டது.
10 ஆண்டு சிறை
அதன்படி 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட செல்வராஜுக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி குலசேகரன் தீர்ப்பளித்தார். இதையடுத்து போலீசார் செல்வராஜை பலத்த பாதுகாப்புடன் அழைத்துச்சென்று கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கில் மிக சிறப்பாக செயல்பட்டு புலன்விசாரணை மேற்கொண்ட புலன்விசாரணை அதிகாரி மற்றும் முதல்நிலை காவலர் சந்திரலேகா ஆகியோரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் பரிசு வழங்கி பாராட்டினார்.