தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் ஜெயில்
ஆற்றில் மீன் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில் பெயிண்டரை அரிவாளால் வெட்டிய கூலித்தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து நாமக்கல் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
அரிவாள் வெட்டு
நாமக்கல் மாவட்டம் மோகனூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் அன்பழகன். இவரது மகன் பிரவீன்ராஜ் (வயது28). அதே பகுதியை சேர்ந்தவர் அஜய் என்கிற வாஜ்பாய் (29). கூலித்தொழிலாளி. கடந்த ஆண்டு மார்ச் மாதம் 29-ந் தேதி காலையில் மோகனூர் காவிரி ஆற்றில் பிரவீன்ராஜ் மற்றும் அஜய் ஆகியோர் மீன் பிடித்துக் கொண்டு இருந்தனர். அப்போது, இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு உள்ளது.
அன்று மாலை மோட்டார் சைக்கிளில் வந்த பிரவீன்குமாரை, அஜய் நிறுத்தி, அரிவாளால் வெட்டி உள்ளார். இதில் கழுத்தில் பலத்த வெட்டுக்காயம் அடைந்த பிரவீன்குமார், வலியால் அலறி துடித்து உள்ளார். அவரை அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு, நாமக்கல் அரசு தலைமை மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
10 ஆண்டுகள் ெஜயில்
இந்த சம்பவம் தொடர்பாக மோகனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையே தலைமறைவான அஜய், கரூர் கோர்ட்டில் சரண் அடைந்தார். இந்த வழக்கு விசாரணை நாமக்கல் முதன்மை சார்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இவ்வழக்கில் நீதிபதி கிருஷ்ணன் நேற்று தீர்ப்பளித்தார். அதில் குற்றம்சாட்டப்பட்ட அஜய்க்கு 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனை மற்றும் ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்தார். இதையடுத்து, சிறை தண்டனை விதிக்கப்பட்ட அஜய் பலத்த போலீஸ் பாதுகாப்புடன், சேலம் மத்திய சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார்.