100 நாள் வேலை திட்ட தொழிலாளர்களுக்கு உடனுக்குடன் சம்பளம்


100 நாள் வேலை திட்ட தொழிலாளர்களுக்கு உடனுக்குடன் சம்பளம்
x
தினத்தந்தி 9 Oct 2023 10:45 PM GMT (Updated: 9 Oct 2023 10:45 PM GMT)

100 நாள் வேலை திட்ட தொழிலாளர்களுக்கு உடனுக்குடன் சம்பளம் வழங்கப்படுகிறது என்று ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி கூறினார்.

திண்டுக்கல்

100 நாள் வேலை

தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி நேற்று திண்டுக்கல்லில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

100 நாள் வேலை திட்டத்தில் 8 வாரமாக சம்பளம் வழங்கவில்லை என்று தவறான தகவல் பரவுகிறது. இந்த திட்டத்தில் மொத்தம் ரூ.2 ஆயிரத்து 100 கோடி விடுவிக்க வேண்டியது இருந்தது. அதில் கடந்த வாரம் ரூ.1,800 கோடி விடுவிக்கப்பட்டது. அதையடுத்து தொழிலாளர்களின் வங்கி கணக்கில் சம்பளம் செலுத்தப்பட்டது. மீதமுள்ள ரூ.300 கோடி அடுத்த வாரம் வந்ததும், உடனே சம்பளம் வழங்கப்படும்.

கடந்த 10 ஆண்டுகால அ.தி.மு.க. ஆட்சியில் ஒரு ஆண்டில் கூட 27 ஆயிரம் கோடி மணி நேரம் வேலை வழங்கவில்லை. ஆனால் தி.மு.க. அரசு கடந்த மார்ச் மாதம் முதல் இதுவரை 27 ஆயிரம் கோடி மணி நேர வேலை வழங்கி இருக்கிறது. இது ஏழை, எளிய மக்களுக்கான திட்டம். இந்தியாவில், தமிழகத்தில் தான் இந்த திட்டம் 200 சதவீதம் நிறைவேற்றப்படுகிறது. ஆனால் ஒரு ஊராட்சி தலைவர் 8 வாரமாக சம்பளம் வழங்கவில்லை என்று கூறுகிறார். கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் 3 மாதங்கள் வரை சம்பளம் வழங்கவில்லை. ஆனால் தி.மு.க. ஆட்சியில் சம்பளம் முழுமையாக உடனுக்குடன் வழங்கப்படுகிறது.

கிராமங்களில் வசதிகள்

அதேபோல் தமிழகத்தில் குடிநீர் திட்டங்களும் சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது. கிராமங்களில் ஏற்கனவே 1,496 மேல்நிலை குடிநீர் தொட்டிகள் கட்டுவதற்கு ரூ.209 கோடியும், புதிதாக 2 ஆயிரத்து 500 மேல்நிலை குடிநீர் தொட்டிகள் கட்டுவதற்கு ரூ.700 கோடியும் என மொத்தம் ரூ.909 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது. கூட்டுகுடிநீர் திட்டத்தில் 3 ஆயிரத்து 500 குடிநீர் தொட்டிகள் கட்ட வேண்டியது இருக்கிறது.

2024-ம் ஆண்டுக்குள் 8 ஆயிரம் குடிநீர் தொட்டிகள் கட்டப்படும். அனைத்து கிராமங்களிலும் மேல்நிலை குடிநீர் தொட்டி இருக்கிறது என்ற நிலை உருவாக்கப்படும். அதற்கேற்ப குடிநீர் ஆதாரங்களை பெருக்கி மக்களுக்கு குடிநீர் வழங்கப்படும். மேலும் கிராமங்களில் ரூ.4 ஆயிரம் கோடி செலவில் 9 ஆயிரம் கி.மீ. சாலை அமைக்கப்படுகிறது.

அதேபோல் நபார்டு திட்டத்தில் ரூ.300 கோடியில் பாலங்கள் கட்டப்படுகிறது. இதுதவிர கிராமங்களில் மேலும் ரூ.1,000 கோடியில் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அனைத்து ஊராட்சிகளிலும் மின்விளக்குகள், சாலை, குடிநீர் வசதி செய்து தரப்படும். ஊரக வளர்ச்சித்துறை உள்பட அனைத்து துறைகளிலும் தமிழக அரசு சிறப்பாக செயல்படுகிறது.

தமிழகத்தின் உரிமை

விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கியது தி.மு.க. ஆட்சியில் தான். தற்போதும் தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் ஒரே ஆண்டில் 1½ லட்சம் மின்இணைப்பு வழங்கப்பட்டன. வறட்சி, வெள்ளத்தால் விவசாயிகள் பாதிக்கப்பட்டால் உடனே உதவுவது தி.மு.க. அரசு தான். விவசாயிகள் நலனில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அக்கறை செலுத்தி வருகிறார். எந்த சூழ்நிலையிலும் தமிழகத்தின் உரிமையை விட்டுக்கொடுக்க மாட்டார். காவிரிநீரை பெற்றுத்தருவார்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story