சேலம் பச்சப்பட்டியில் 100 வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதி


சேலம் பச்சப்பட்டியில்  100 வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதி
x

சேலத்தில் பெய்த கனமழையால் பச்சப்பட்டி பகுதியில் 100 வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.

சேலம்

சேலம்,

வீடுகளில் மழைநீர் புகுந்தது

சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் உள்ள ஏரி, குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்து நிரம்பி வருகின்றது. இந்த நிலையில், சேலத்தில் நேற்று மதியம் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. ஆனால் மழை பெய்யவில்லை. பின்னர் மாலை 4 மணியளவில் சேலம் மாநகரில் பலத்த மழை பெய்தது. இதனால் சாலையில் நடந்து சென்றவர்கள் குடையை பிடித்துக்கொண்டு சென்றதை காணமுடிந்தது.

சூரமங்கலம், அழகாபுரம், அஸ்தம்பட்டி, கலெக்டர் அலுவலகம், புதிய மற்றும் பழைய பஸ்நிலையம், குகை, அம்மாப்பேட்டை, உடையாப்பட்டி உள்பட பல இடங்களில் சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக மழை கொட்டித்தீர்த்தது. இந்த மழையால் 40-வது வார்டுக்கு உட்பட்ட பச்சப்பட்டி மற்றும் ஆறுமுகநகர், அசோக் நகர் ஆகிய இடங்களில் தாழ்வான பகுதியில் உள்ள சுமார் 100-க்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியே வரமுடியாமல் அவதிக்குள்ளாகினர். பின்னர் அவர்கள் வீடுகளுக்குள் தேங்கிய தண்ணீரை பாத்திரங்கள் மூலம் வெளியே ஊற்றும் பணியில் ஈடுபட்டனர்.

கால்வாய் வசதிகள்

மேலும், பச்சப்பட்டி பகுதியில் உள்ள சாலைகளிலும் மழைநீர் தேங்கி நின்றதால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். எனவே, 40-வது வார்டு பகுதிகளில் தேவையான இடங்களில் கால்வாய் வசதிகள் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Related Tags :
Next Story