காணாமல் போன 100 செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு


காணாமல் போன 100 செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு
x

நெல்லையில் காணாமல் போன 100 செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

திருநெல்வேலி

நெல்லை மாநகர பகுதிகளில் காணாமல் போன செல்போன்கள் குறித்த புகார்கள், இணையதள மோசடி உள்ளிட்ட புகார்கள் குறித்து விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் அவினாஷ்குமார் சைபர் கிரைம் போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சண்முகவடிவு, சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன் உள்ளிட்டவர்கள் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தனர். அதன்படி மாநகர பகுதிகளில் காணாமல் போன ரூ.25 லட்சம் மதிப்புள்ள 100 செல்போன்கள் மீட்கப்பட்டு நேற்று காலையில் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வைத்து உரிமையாளர்களிடம் வழங்கப்பட்டது.

அதேபோல் இணையதளம் மூலமாக வேலை வாங்கி தருவதாகவும், பரிசு விழுந்து இருப்பதாகவும் கூறி குறுஞ்செய்தி அனுப்பி ஓ.டி.பி. பெற்று அதன்மூலம் மோசடி செய்யப்பட்ட ரூ.1 லட்சத்து 90 ஆயிரத்து 819-ஐ ஏமாற்றியவர்களின் வங்கி கணக்கை முடக்கி உரியவர்களிடம் வழங்கப்பட்டது.

இணையதள வழி மூலமாக பண மோசடி செய்யப்பட்டதாக பெறப்பட்ட புகார்களுக்கு துரிதமாக நடவடிக்கை மேற்கொண்டு மோசடி செய்யப்பட்ட 23 நபர்களுக்கு உரிய தொகையினை மோசடி செய்த நபர்களின் வங்கி கணக்கில் ரூ.1 கோடியே 34 லட்சத்து 45 ஆயிரத்து 883-ஐ முடக்கி வைக்கப்பட்டு உரியர்களுக்கு திரும்ப வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

துரிதமாக செயல்பட்ட சைபர் கிரைம் போலீசாரை மாநகர போலீஸ் கமிஷனர் அவினாஷ்குமார் பாராட்டினார். சைபர் கிரைம் தொடர்பான புகார்களுக்கு 1930 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். அதேபோல் www.cybercrime.gov.in என்ற இணையதள முகவரியில் புகார்களை பதிவு செய்யலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.


Next Story